புலிகளின் எல்லாளன் படையின் இறுதி எச்சரிக்கை

12.11.12

விடுதலைப் புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி பிரான்சில் கொல்லப்பட்ட பின், வெளிநாட்டு புலி பிரமுகர்களை மிரள வைக்கும் விதத்தில எச்சரிக்கை விடுத்துள்ளது எல்லாளன் படை. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு புலிகளின் போட்டி அணிகளுக்கு இடையிலான மோதல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ‘நிர்வாக ரீதியான கடும் நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று கூறுகிறது எச்சரிக்கை. எல்லாளன் படையின் ‘கடும் நடவடிக்கைகள்’ என்பதன் அர்த்தம், வெளிநாட்டு வீதிகளில் மேலும் சில வீர மரணங்கள் விழலாம் என்பதே! விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் இயக்கப்பட்ட ஒரு பிரிவுதான் எல்லாளன் படை. விடுதலைப் புலிகள் தமது பெயரில் செய்ய விரும்பாத தாக்குதல்களை ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்து நடத்துவது வழக்கம். எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்தால், சம்மந்தப்பட்டவர்கள் தலை தப்பாது என்பதும் நடைமுறையாக இருந்து வந்தது. சுருக்கமாக சொன்னால் இந்த எல்லாளன் படை, சொன்னதை செய்த அமைப்பு. இறுதி யுத்தத்தின்போது, இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளை அடைந்த விடுதலைப் புலிகளில் எல்லாளன் படை உறுப்பினர்களும் உள்ளார்கள். இதுவரை அமைதி காத்த அவர்கள், தமது நடவடிக்கைகளை தொடங்கப் போவதாக காட்டியுள்ள சிக்னலே, இந்த எச்சரிக்கை. எல்லாளன் படை எச்சரிக்கையில், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுவதால், பிரான்சில் கொல்லப்பட்ட தளபதி பரிதியின் மேற்பார்வையில் இருந்த சொத்துக்கள் இனி யாருடைய கன்ட்ரோலுக்கு போகப் போகிறதோ, அந்த நபருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். ஏற்கனவே ஒரு கொலை விழுந்துவிட்ட நிலையில், இந்த எச்சரிக்கையை ஒதுக்கிவிட முடியாது.

0 கருத்துக்கள் :