தலை நிமிர்ந்து நின்ற தமிழர்கள் இன்று அல்லல் படும் அவலம்! மட்டு அரச அதிபர்

20.11.12


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பல்வேறு துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும் உட்பட்ட மாகாணங்கள். ஒரு காலத்தில் கல்வியிலும் உயர் பதவிகளிலும் தலைநிமிர்ந்து நின்ற தமிழர் சமுதாயம் இன்று அல்லற்பட்டு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.சாள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்லடி இராமகிருஷ்ண மிசன் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: 30 வருடகால போருக்குப் பின்னர் மீண்டும் எழுந்து நிற்கின்ற இந்த சமூகத்திலே எமது பிள்ளைகளின் கல்வி தான் மிக முக்கியமானது. அவர்கள் மீண்டும் எழுந்து நிற்கவேண்டும். பாடசாலைக் கல்வியை விடுத்து தனியார் வகுப்புக்களில் முற்றுமுழுதாக தங்கியிருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் அழுத்தங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது. எனவே பாடசாலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாடசாலை என்பது தனியாகப் புத்தகங்களை மட்டும் கற்பிக்கும் இடமல்ல. மாணவர்கள் வாழ வேண்டிய முறைகள், அவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க விழுமியங்கள், கலை, கலாசாரம், அவர்கள் எதிர்கால வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்களைக் கற்பிக்கும் கலைக்கூடமே பாடசாலையாகும். என்றார்.

0 கருத்துக்கள் :