வைகோவை லண்டன் மாநாட்டில் பங்கேற்கவிடாது இந்திய அரசு சதி

6.11.12


லண்டனில் நாளை நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்படவிருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் தீவிர தமிழீழ ஆதரவாளருமான வைகோ அவர்களை செல்லவிடாது தடுப்பதற்காக இந்திய அரசு சதியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. உலகமெங்கும் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை ஒரு குடைக்கீழ் அழைத்து ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கும் முகமாக லண்டனில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு உலகமெங்கும் இருந்து தலைவர்கள் ஆர்வலர்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள். இந்நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்தும் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பில் பலர் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள். தமிழகத்தில் தமிழ்த் தேசியத் தளத்தில் தீவிரமாக செயலாற்றிவரும் வைகோ பழநெடுமாறன் சீமான் போன்றவர்கள் மௌனமாக இருந்துவருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விசாரித்தபோது ஈழத்தில் தமிழினம் கருவறுக்கப்பட்ட போது தமிழக அரியணையில் வீற்றிருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு இழைத்த துரோகத்தை தமிழினம் என்றும் மறக்காது. இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு தி.மு.க. வைச் சேர்ந்தவர்களையும் அழைத்திருப்பதால் ஏற்பட்ட அதிர்ப்தியினாலேயே இவர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தது. வைகோ அவர்கள் மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் கண்டிப்பாக தான் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் ஒருவேளை வரமுடியாவிட்டால் ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியை அனுப்பிவைப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் திடீரென ம.தி.மு.க. சார்பில் யாரும் வரமாட்டார்கள் என்ற ஏமாற்றமான பதில் வழங்ககப்பட்டதாகவும் நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது வைகோவின் லண்டன் பயணத்தை தடுப்பதில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது. நீதிமன்றத்தில் வைகோ வெளிநாடு செல்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துவிட்டு தூதரக நடவடிக்கைகளில் தனது கைவரிசையினைக் காட்டி லண்டன் செல்வதற்கான விசாவினை வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதத்தை ஏற்படுத்தி சதிச்செயலில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு. இறுதிவரை லண்டன் பயணத்திற்கான முழு முயற்சியில் வைகோ ஈடுபட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது. உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்கள் தலைமைத்துவம் இன்றி அநாதரவாக நிற்கின்றபோதும் உலகத்தமிழர்களை ஒன்றிணைத்து தமிழின விடுதலைக்கான களப்பணியை முன்னெடுத்து வருகையில் தமிழகத்தில் உள்வீட்டுச்சிக்கல்கள் வருத்தமளிப்பதாகவே உள்ளது.

0 கருத்துக்கள் :