ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தில் சிறிலங்காவை காப்பாற்றிய இந்தியா!

6.11.12


ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் இந்தியா செயற்பட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் விசனம் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்குறைப்பு, வடக்குத் தேர்தல் என்பன பற்றி கருத்து வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த கருத்துக்களை பரிந்துரைகளாக இந்தியா ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவில்லை. சர்வதேச நாடுகள் இலங்கைக்கு சாதகமாகவும் பாதகமாகவும் மனித உரிமைகளை மேற்படுத்துவதற்காகவும் சுமார் 210 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தியா எந்த பரிந்துரைகளையும் செய்யாது மௌனம் காத்துள்ளது. சர்வதேச நாடுகள் சமர்ப்பித்த பரிந்துரைகளை இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய மூன்று நாடுகளும் இலங்கை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அறிக்கை ஒன்றை நேற்று சமர்ப்பித்திருந்தன. இந்த அறிக்கையில் 210 பரிந்துரைகளில் 100பரிந்துரைகளை சிறிலங்கா நிராகரித்து விட்டதாகவும் 110 பரிந்துரைகளை கவனத்தில் எடுத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தாம் சமர்ப்பித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதுடன் சில பரிந்துரைகளை மாற்றி சிறிலங்காவுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க உட்பட சில மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஜெனீவாவில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள இலங்கை தூதுக்குழுவினர் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தித்து சந்தித்து நடத்திய இரகசியப் பேச்சுகளை அடுத்தே இந்தியா தனது நிலைப்பாட்டை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டதாக இராஜததந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துக்கள் :