கேணல் பரிதியின் வித்துடலுக்கு மக்கள் எழுச்சியுடன் இறுதி வணக்கம்

24.11.12

தாயகவிடுதலை கனவை நனவாக்க களத்திலும் புலத்திலும் களமாடி எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சத்தில் தாங்கிய மாவீரன் கேணல்.பரிதி அண்ணாவின் இறுதி வணக்க நிகழ்வு விடுதலைப் பெருமுழக்கத்துடன் நடைபெற்றுள்ளது. தலைவனது கட்டளையினை ஏற்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப்பொறுப்பை ஏற்று பத்து ஆண்டுகள் களப்பணியாற்றிய கேணல்.பரிதி அண்ணா எதிரிகளின் நயவஞ்சகத்தனத்தால் துரோகிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மீளாத்துயில் கொள்கின்ற வேளையில் நாம் இருக்கின்றோம் அவரது பாதச்சுவட்டை அடியொற்றி விடுதலைப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் இருக்கின்றோம் என இடித்துரைக்கும் விதமாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் எழுச்சிக்கோலம் பூண்டு இறுதி வணக்கம் செலுத்தி விடைகொடுத்துள்ளார்கள். ஒன்றுவிழ நூறாய் எழுவோம் என்பது வெறும் வார்த்தை வீரமல்ல எமது இதயத்துடிப்பின் ஓசை என்பதை பறைசாற்றுவது போல பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து விடுதலை தாகம் கொண்டு பாரிசு நகரை நோக்கி அணிதிரண்டு இடித்துரைத்துள்ளார்கள் புலம்பெயர் தமிழ் மறவர்கள். கேணல்.பரிதி அண்ணாவின் வித்துடல் வைக்கப்பட்ட பேழை ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு செயற்பாட்டாளர்களினதும் மக்களினதும் உணர்வு பூர்வமான இறுதி வணக்கத்தை அடுத்து எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிவணக்க நிகழ்வு ஏற்பாடுகள் செய்யப்பட்ட விதமும் அங்கு கடைபிடிக்கப்பட்ட ஒழுங்கு முறைகளும் இழப்பின் துயரத்தில் நின்றாலும் தலைவனது வழிகாட்டுதலில் கட்டுக்கோப்பாக பயணிக்கின்றோம் என்பதை பறைசாற்றி நிற்கின்றது. இசை வாத்தியங்கள் முழங்க அணிவகுத்துவந்த வாத்தியக்குழுவினரைத் தொடர்ந்து மாவீரர்கள் சிந்திய குருதியால் சிவந்த தமிழினத்தின் தேசியக்கொடியான புலிக்கொடி ஏந்திவரப்பட பின்னால் கேணல்.பரிதி அண்ணாவின் வித்துடல் சுமந்துவரப்பட்டது. வித்துடல் இறுதிவணக்க அரங்கத்திற்குள் எடுத்துவரப்பட்ட போது இருமருங்கிலும் கூடியிருந்த தமிழ்மக்கள் கனத்த இதயத்துடன் வரவேற்புக் கொடுத்த நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாக அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். எதிரியின் அச்சுறுத்தலை பொருட்டாகவே கருதாது அவனிற்கு தமது உணர்வால் திருப்பியடிக்கும் விதமாக கூடியிருந்த புலம்பெயர் ஈழத்தமிழர்களது உணர்வு வெள்ளத்தை கடந்து நிகழ்விடத்திற்கு கொண்டுவரப்பட்ட கேணல்.பரிதி அண்ணாவின் வித்துடல் பேழை வைக்கப்பட்டு தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி போர்த்தப்பட்டது. முக்கிய புலம்பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள் மாலை அணிவித்து தமது செயல்தோழனிற்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். இறுதி வணக்க நிகழ்வு நடைபெற்ற மண்டபம் நிறைந்திருந்ததால் பெருமளவில் கூடியிருந்த தமிழர்கள் மண்டபத்திற்கு வெளியே திரண்டிருந்து தமது வீரத்தளபதிக்கு இறுதி வணக்கத்தை அமைதியான முறையில் செலுத்தியிருந்தார்கள்.

0 கருத்துக்கள் :