இலங்கை போர்குற்றம் ஐ.நா.சபைக்கு ஒரு பாடம்: பொதுச்செயலாளர் பான் கீ மூன் அறிக்கை

15.11.12

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பான இந்த விசாரணை அறிக்கையை ஐ.நா.சபை முன்னாள் அதிகாரி சார்லிபெட்ரி தலைமையிலான குழு தயாரித்தது. அந்த அறிக்கை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் வசம் வழங்கப்பட்டது. சார்லி பெட்ரி தலைமையிலான குழுவின் வரைவு அறிக்கையில் உள்ள சில தகவல்கள் ரகசியமாக வெளியே கசிந்து உள்ளன. இறுதிகட்ட போரின் போது அப்பாவி தமிழர்களை பாதுகாக்க ஐ.நா. சபை தவறிவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதோடு, இலங்கை அரசின் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. ஆய்வறிக்கை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இலங்கை போர்குற்றம் தொடர்பாக என்முன் வைக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறோம். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஐ.நா.சபை தனது பொறுப்புகளை சரிவர செயல்படுத்த முடியவில்லை. இதனை ஐ.நா. சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் சர்வதேச மக்களிடம் ஐ.நா.சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாமல் இருக்க ஐ.நா.சபையின் செயல்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :