தவறிய ஐநா.... சிதறிய எம்மினம்

13.11.12

உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், பொதுமக்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து ஐ,நா தவறி விட்டது என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த ஒரு நபர் குழுவின் உள்ளக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஐ.நாவின் மோசமான தவறின் அடையாளம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் கடப்பாடுகள் குறித்து ஆராய சாள்ஸ் பெற்றி என்ற நிபுணரை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார். இந்த உள்ளக விசாரணை அறிக்கையிலேயே, பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து ஐ.நா தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே, பிபிசிக்கு கசிந்துள்ளது. ஐ.நா அதிகாரி சாள்ஸ் பெற்றி தற்போது இந்த அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கையளிப்பதற்காக கையளிப்பதற்காக நியுயோர்க்கில் தங்கியுள்ளார். இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா விசாரணை அதிகாரி சாள்ஸ் பெற்றி, பிபிசிக்கு கிடைத்துள்ள அறிக்கை ஆவணம், இறுதிப்படுத்தப்படுவதற்கு முந்தியது என்றும், ஆனால் அது இறுதி அறிக்கையை பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார். வெளியே கசிந்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக, கருத்து வெளியிட மறுத்துள்ள ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி, இறுதி அறிக்கையை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவர் அதை வாசித்த பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :