மாவீரர் தியாகத்தால் இன விடுதலை கிடைப்பது உறுதி

26.11.12


கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே. அரசாங்கத்திற்கும், அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நன்றாக ஒரு விடயம் புரிந்திருக்கின்றது. எதனை அழித்தாலும், மக்கள் மீது எத்தகைய அடக்கு முறைகளை திணித்தாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுடைய நினைவுகளை அழிக்க முடியாது. ஏதோவொரு வழியில் மாவீரர்களுடைய நினைவுகளை மக்கள் அனுஸ்டிக்கவே போகின்றார்கள். அந்த வழிகளையும் முற்றாக மூடிவிடவேண்டும் என்றே படையினர் பகீரத பிரயத்தனம் எடுத்திருக்கின்றனர். ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும், அதன் காட்டுமிராண்டித்தனமான இராணுவ இயந்திரமும் புரிந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. அதாவது கடந்த 30வருடங்களில் 40ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர். எனவே அந்த 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்த மாவீரர்களுடன் சம களத்தில் நின்ற போராளிகள், நண்பர்கள், மனைவி, பிள்ளைகள் என ஒவ்வொரு தமிழனும் மாவீரர்களுடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றான். சிலர் அற்ப சலுகைகளுக்காக படையினருக்கும், அரசாங்கத்திற்கும் பின்னால் சென்றிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு மாவீரன் நெருக்கமான தொடர்பு இருக்கும். மாவீரர்கள் ஒன்றும் கூலிப்படை கிடையாது. அடக்கி, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடையாளக் குறிகள். போராடினாலே வாழ்வென்றுரைத்த மூன்று தசாப்தங்களின் நிலைக்குறியீடுகள். கடைசி தமிழன் உள்ளவரையில் மாவீரர்களின் நினைவுகள் வாழும். மாவீரர்கள் பூசிக்கப்படுவார்கள். நடுகல் வழிபாடுகளின் தாய், தந்தையர்கள் நாங்கள். எங்கள் சொந்தங்களின் நினைவுகளைக் கொண்டாட முடியவில்லை. எத்தனை அழிவுகள், இழிவுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி மாவீரர்களுடைய கனவுகளையும், அவர் தம் நினைவுகளையும் சுமந்து கொண்டு கால்கடுக்க நடக்கின்றோம். அடைய வேண்டிய இலக்கினை நோக்கி. நிச்சயமாக எங்கள் மாவீரர்கள் சிந்திய இரத்தத்திற்கும், அவர்கள் கொடுத்த உயிர் விலைக்கும் ஒரு விளைவு கிடைக்கும். தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும். அந்த நம்பிக்கையோ, பிரிவினைகள், பேதங்கள் இல்லாமல் அந்த உத்தமர்களை நினைவில் கொள்வோம். மூச்சு மூடியும் கடைசித் தருணத்திலும் அவர்கள் உச்சரித்துக் கொண்ட தாரக மந்திரத்தை சொல்லிக் கொள்வோம். ஒரு நாள் அடிவானில் சூரியன் பிறக்கையில் இந்த இனம் விடுதலை பெற்று விட்டதாய் செய்தி வரும். அதற்காய் அஸ்த்தமன நேரத்தை ஒவ்வொரு நாளும் வேகப்படுத்திக் கொள்கின்றோம்.

0 கருத்துக்கள் :