அமெரிக்காவில் இன்று விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்

6.11.12

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல மாநிலங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அமெரிக்காவில் இன்று 50 மாகாணங்களில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர். துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடேனும், குடியரசு கட்சி சார்பில் பால் ரயானும் களத்தில் உள்ளனர். கடந்த 18 மாதங்களாக இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த 4 ஆண்டுகளாக தனது ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களைக் கூறி வாக்கு சேகரித்தார். அனைத்து துறைகளிலும் ஒபாமா நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டதாக மிட் ரோம்னி விமர்சித்துள்ளார். கருத்துக் கணிப்புகளில் இருவருக்குமான மக்கள் ஆதரவில் நூலிழை வித்தியாசம் தான் இருப்பதாகவும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் நடுநிலை வாக்காளர்கள் எடுக்கும் முடிவு தான் யாருக்கு வெற்றி என்பதைத் தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 16 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தலுக்காக 6 பில்லியன் அமெரிக்க டொலரை அந்நாடு செலவழித்துள்ளது. இத்தேர்தலில் ஜனாதிபதி, 33 செனட் சபை உறுப்பினர்கள், பிரதிநிதிகள் சபையின் 435 உறுப்பினர்கள் ஆகியோரை மக்கள் வாக்களித்து தெரிவு செய்ய உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் முன் கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை உள்ளது. இதன் படி 34 மாகாணங்களில் 2.7 கோடி பேர் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். இவர்களில் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் அடக்கம்.

0 கருத்துக்கள் :