சிங்களவர்களும் வீதிகளில் சாகவேண்டிய நிலை தோன்றும்” மகாநாயக்க தேரர்

20.11.12


அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் நாடு அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலை நீடித்தால், சிங்கள பௌத்தர்களும் காடுகளில் வாழவேண்டிய, வீதிகளில் சாகவேண்டிய அபாயநிலை தோன்றக்கூடும்” என்று எச்சரிக்கிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர். இந்த அபாய நிலையிலிருந்து நாட்டையும், சிங்கள, பௌத்த மக்களையும் பாதுகாக்கப் பௌத்த குருமார்கள் ஒழுக்கமாக நடந்து, பௌத்த மதத்தின் புகழைப் பரப்பவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாத்தளையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது சில அரசியல்வாதிகள் பணத்துக்கு மயங்கி நாட்டின் பிரதான நகரங்களிலுள்ள காணிகளை மாற்று மதத்தவர்களுக்கு இரகசியமாக விற்கின்றார்கள். இந்த நாட்டின் ஆட்சிபீடத்தில்உள்ளவர்களிடம் பல தடவைகள் இதைப் பற்றிக் கூறியும் அவர்கள் செவிசாய்க்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டைப் பாதுகாக்கவேண்டும். எமது பௌத்த சிறுவர்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை இந்த நாட்டில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அந்நிய மதத்தவர்கள் இவ்வாறு எமது காணிகளை விலைக்கு வாங்கிக்கொண்டு போனால் சிங்கள பௌத்தர்கள் வீதிகளில்தான் சாகவேண்டிவரும். இங்குள்ள சிங்கள, பௌத்தர்களுக்கு வாழ்வதற்கு இலங்கையைத் தவிர வேறொரு நாடும் இல்லை. எமது அரசியல்வாதிகள் பேராசையால் குறைந்த விலைக்கு எமது காணிகளை அந்நிய மதத்தவர்களுக்கு விற்கிறார்கள். இதனால் நாம் காடுகளுக்குச் சென்று வாழவேண்டிய நிலைமைதான் ஏற்படும். பங்களாதேஷில் உள்ள பௌத்த சின்னங்களை முஸ்லிம் தீவிரவாதிகள் உடைத்து அழித்துள்ளார்கள். அன்று பௌத்த நாடுகளாயிருந்த மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்த பௌத்தர்களை விரட்டியடித்து அங்கு அந்நிய மதத்தவர்களே இன்று பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அதுபோன்ற ஒரு நிலைமை இலங்கையிலும் உருவாகாமல் நாம் பாதுகாக்கவேண்டும். கட்சி அரசியல் காரணமாக இங்குள்ள பௌத்தர்கள் நாளுக்கு நாள் உரிமைகளை இழந்துவருகிறார்கள். இங்குள்ள அரசியல்வாதிகளிடம் பல தடவைள் இதைப் பற்றிக் கூறியும் அவர்கள் கவனத்தில் எடுக்காததால்தான் பௌத்தர்களாகிய உங்களிடம் இதைப் பற்றிக் கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :