ஈழத்தமிழர் உரிமைக்காக தமிழக இளைஞர்கள் போராளிகளாக மாற வேண்டும்: தா.பாண்டியன்

15.11.12

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டு போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போரின் கடைசி நாட்களில் நடந்த படுகொலைகள் இதுவரை நடைபெறாத படுகொலையாகும். இலங்கையில் நடைபெற்ற படுகொலை பற்றி ஐக்கிய நாடுகள் சபை மறைத்துவிட்டது. அதன் பிரதிநிதிகள் தங்கள் கடைமைகளில் இருந்து தவறிவிட்டார்கள் என்று அவர்களை குற்றம்சாட்டுவதற்கு முன்பு நாம் நம்நாட்டில் செய்யவேண்டிய கடைமைகளை முறையாக செய்தோமா? என்பதை இப்போது நம்மை நாமே பரிசோதித்து கொள்ளவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் தங்கள் கடமையில் தவறிவிட்டார்கள் என்ற செய்தி வந்தபிறகு, இன்றைக்கு ஐ.நா. சபையை மட்டும் குற்றம்சாட்டி பயன் இல்லை. நாம் இந்திய அரசின் மூலமாகத்தான் பேசவேண்டும். இந்திய மத்திய அரசு, ஐ.நா. சபையில் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றியதா? என்பதுதான் நாம் கேட்கவேண்டிய கேள்வி. மத்திய அரசு தமிழ் மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்ததா? என்பது நாம் கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி. ஐ.நா. சபையின் குழுவே தன் குற்றத்தை ஒப்பு கொண்டு செய்தி வெளியிட்ட பிறகுகூட, தமிழக மக்களும், தமிழ்நாட்டு கட்சிகளும்தான் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன. டெல்லியில் உள்ள மகான்கள் இதுவரை இது பற்றி பேசவில்லை. 2009 மே மாதம் 17-ந் தேதி இலங்கையில் உலகம் கண்டிராத படுகொலை நடந்த நேரத்தில் டெல்லி மந்திரி சபையில் இருந்த தமிழர்கள் யார்? இவர்களும் இலங்கையில் நடந்த படுகொலையை தெரிந்து கொள்ளாமல் அவர்கள் கபினட் அமைச்சர்களாக இருந்ததால் அவர்கள்தான் தமிழ் மக்கள் முன்பு முதல் குற்றவாளிகளாக ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும். அதற்குரிய தண்டனையையும் ஏற்க தயாராக வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள சிங்கள அரசு முன்வராவிட்டால் ஐ.நா. சபையில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்றும் இந்திய அரசு வாதிடவேண்டும். இவை எல்லாம் வாதிடவைக்க வேண்டும் என்றால் ஐ.நா. சபையில் ஒரு கிளார்க்கிடம் மனு கொடுத்துவிட்டு வருவதின் மூலம் நடக்காது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் போர்க்கால உணர்வுகளுடன் போராளிகளாக மாறவேண்டும். நாம் இங்கிருந்து போர்க்கோலம் பூண்டு போர்க்குரல் எழுப்பாவிட்டால், மத்திய அரசை அந்த கடமையை செய்யவைக்க முடியாது. முல்லைத்தீவில் இன்றும் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த செய்திகளை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு முழு உரிமை பெற்றுத்தரும் வரையில் இனி எதிலும் கவனம் செலுத்தமாட்டோம் என்ற போர்க்குரலை தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுப்பினால் மத்திய அரசு பணியும். பணிய தவறினால் மத்திய அரசின் தன்மை மாற்றப்படும். பிறகு நியாயம் பிறக்கும். இலங்கையில் இறந்தவர்களின் உயிரைத்தான் மீட்க முடியாது. உரிமைகளை மீட்கமுடியும். இலங்கை தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயிரை கொடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :