ஈழத்தமிழர்கள் எவ்வாறு தீபாவளி கொண்டாடினார்கள்?

14.11.12

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை வட இலங்கையில், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கின்றார்கள். காலையில் ஆலயங்களுக்குச் சென்று பலரும் தீபாவளிக்கான சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்கள். இளைஞர்களும் சிறுவர்களும் பட்டாசுகளைக் கொளுத்தியும் மகிழ்ந்தனர். சினிமாவுக்குச் சென்றும் பலர் பொழுதைக் கழித்தனர். வன்னியில் தீபாவளி பிரகாசிக்கவில்லை
ஆயினும் மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வன்னிப் பிரதேசத்தில் தீபாவளி பண்டிகை சோபிக்கவில்லை. அங்கு முறையான தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினாலும், போதிய வருவாய் இல்லாததனாலும், பல இடங்களில் இன்னும் தற்காலிக வீடுகள் கூட அமைக்கப்படாத நிலையிலும், தாங்கள் இந்தத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை என பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். குதூகலமாகத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மனத்தளவில் இங்கே பலர் இன்னும் தயாராகவில்லை. பல குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இன்னும் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் வைக்கப்பட்டிருப்பதனால், அவர்களின்றி தங்களால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாதிருப்பதாகவும் சிலர் தெரிவித்திருக்கின்றனர். கிலியேற்படுத்திய போர் விமானம் இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குண்டு வீச்சு விமானம் ஒன்று வட்டமடித்து, தாழப் பறந்து குண்டு வீசுவதைப்போல திடீரென வந்துசென்றிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்களிடையே அச்சமும் பதட்டமும் ஏற்பட்டிருந்தது. இந்த விமானம் என்ன காரணத்திற்காக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இவ்வாறு வட்டமடித்துப் பறந்து சாகசம் காட்டிச் சென்றது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

0 கருத்துக்கள் :