காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியன் ஆகாதீர்!

30.11.12


மாவீரர் நாளில் நீட்டிய தன்னுடைய கொலைவெறி நாக்குகளை, அதிகாரம் இரண்டாவது நாளாகவும் உள்ளெடுக்கவில்லை. முதல் நாளை விடவும் இரண்டாம் நாளில் இரை தேடும் படலம் இன்னும் அதிகமானதாகவே இருந்தது. முதல் நாள் தம்முடைய விடுதிகளுக்குள் படைத் தரப்பு அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதைக் கண்டித்து புதன்கிழமை பல்கலை மாணவர் தம்முடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்த முனைந்தனர்.
ஆரம்பத்தில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கூடிய மாணவர்கள் பின்னர் பேரணியாக பல்கலைக்கழக பிரதான வாசல் ஊடாகப் புறப்பட்டு, விஞ்ஞானபீட வாசல் வரை பிரதான வீதியூடாக மீண்டும் உள்வரும் திட்டத்தோடு புறப்பட்டனர்.
பிரதான நுழைவாசலுக்கும் விஞ்ஞான பீட வாசலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 150 மீற்றர்தான். ஆனால், இந்த 150 மீற்றர் தூரத்துக்குக் கூட ஜனநாயகத்தை பயணிக்கவிட அதிகாரம் விரும்பவில்லை. வன்முறை உணர்வோடு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் சேதங்களை விளைவிக்கும் முயற்சிகளில் கூட மாணவர்கள் இறங்கவில்லை.
அவர்கள் தமது கோபத்தை சுலோகங்களில் உள்ள வார்த்தைகளில் மட்டுமே காட்டியிருந்தனர். மிக மிக அமைதியாக ஒரு ஆன்மீக ஊர்வலத்தைப் போலவே பிரதான வாசலில் இருந்து மாணவர்கள் புறப்பட்டனர்.
ஆனால், மாணவர்களைக் கண்டதுமே அதிகாரத்துக்கு இரத்த வெறி பிடித்துவிட்டது. கைகளில் கொட்டன்களோடும், துப்பாக்கிகளோடும் பாய்ந்த படைகள் ஆண், பெண் என்ற பேதமின்றி மாணவர்களை துவம்சம் செய்துவிட்டே ஓய்ந்தது.
இவ்வாறு மாணவர்கள் மீது படைத் தரப்பின் அராஜகம் இரு நாள்களாக நிகழ்ந்த பின்னரும் பல்கலைக்கழக நிர்வாகம் அதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றால் துடித்துப் பதைத்து, சம்பவ இடத்துக்கு வந்து அவர்களைக் காக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பு.
 தமது பிள்ளைகளை எங்கிருந்தோ வந்தவர்கள் நடு வீதியில் வைத்து நாய் போல அடிப்பதை எந்தப் பெற்றோர் கைகட்டி வேடிக்கை பார்ப்பர்? பல்கலைக்கழக நிர்வாகத்தை நம்பியே தம்முடைய பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனவே, பல்கலைக்கழக மாணவர்களை, பெற்றோரின் இடத்தில் இருந்து அவர்களைக் காக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.
 ஆனால், அந்தக் கடமையில் இருந்து தவறியதோடு மாத்திரம் அல்லாமல் மாணவர் மீதான தாக்குதலைக் கண்டிக்கக்கூட வக்கற்ற நிலையில் முடமாகிப் போயுள்ளது அந்த நிர்வாகம். கேட்டால், “துணைவேந்தர் விடுமுறையில் உள்ளார்” என்று நொண்டிச்சாட்டு சொல்லிவிட்டு தப்பிக்கும் முயற்சிகளே தொடர்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னல் நேரும்போது விடுமுறையைத் தொடர்வது ஒரு நல்ல நிர்வாகிக்கு அழகாகாது. இதேவேளை, துணைவேந்தருக்காகப் பதில் கடமைபுரியும் பல்கலைக்கழக ‘பேராசான்’ ஒருவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை “இவர் பல்கலைக்கழக படிப்பை முடித்து வெளியேறிய மாணவர்” என்று தவறான தகவலை கூறியதால் அந்த மாணவன் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, நீண்ட நேரம் தடுத்துவைக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமது கல்விக் கூடத்தில் பயிலும் மாணவரைக் கூட அவரது பல்கலைக்கழக அடையாள அட்டையைப் பரிசீலித்த பின்னரும் இனங்கண்டுகொள்ள முடியாத இத்தகையவர்கள் இருப்பதால் தான் மாணவர்கள் கண்டவர்களிடமெல்லாம் கோயில் மாடு போல அடிவாங்க வேண்டியிருக்கிறது.
 பேராசான்களே! பல்கலை மாணவர்களை காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியனைப் போல் காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தையாவது கைவிடுங்கள், அது போதும்.

0 கருத்துக்கள் :