அனகை முருகேசன் கைது : விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா?

1.11.12

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் தேமுதிகவின் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா என்று பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது பற்றி சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம் கடந்த சனிக்கிழமை அன்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது விஜயகாந்துக்கும், நிருபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தனியார் தொலைக்காட்சி நிருபர் பாலுவை எம்.எல்.ஏ. ஒருவர் கீழே தள்ளி விட்டார். இதுதொடர்பாக நிருபர் பாலு விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது புகாரை ஏற்று சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட வில்லை. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட விஜயகாந்த் மீதும், நிருபர் பாலுவை தாக்கிய அனகை முருகேசன் எம்.எல்.ஏ. மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவசர கால மனுவாக ஏற்றுக்கொண்டு இன்று மதியமே இந்த மனு மீது விசாரணை தொடங்கவேண்டும் என்று கோரியிருந்தார், ஆனால், இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி மனு மீதான விசாரணை நாளை (31.10.2012) நடைபெறும் என்று அறிவித்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அனகை முருகேஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா என்று பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.

0 கருத்துக்கள் :