மே 18 க்குப் பின்னர் புலத்தில் உருவாகியுள்ள புதுப் படை

21.11.12


2009ம் ஆண்டு மே மாதத்தில் தாம் விடுதலைப் புலிகளை யுத்தரீதியாக வென்றுவிட்டதாக இலங்கை அரசு சர்வதேசத்துக்கு பறைசாற்றியது. ஆனால் அந்த நாள் முதல் புதிய படை ஒன்று உருவாகி வருவதை இலங்கை அரசு கவனிக்க தவறிவிட்டது ! இலங்கையில் ஆயுதங்களைக் கையில் எடுத்த விடுதலைப் புலிகள் தாம் தமது முக்கிய எதிரி என்று நினைத்த மகிந்தர் அரசு, தனக்கு பிற்காலத்தில் ஏற்பட இருந்த ஆபத்து பற்றி சற்றும் எண்ணியிருக்கவில்லை என்று சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. புலிகளை அழித்ததால், உலகம் தன்னைப் பாராட்டும் என்றும், இந்தியா தன்னை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் எனவும் மகிந்தர் எண்ணியிருந்தாராம்.
ஆனால் எல்லாமே தலைகீழாக நடந்து முடிந்துள்ளது. தனது அரச படைகளுக்கு சரி நிகரகாக இருந்த புலிகளை வெற்றிகொண்ட இலங்கை அரசு, தனது இராஜதந்திரிகளுக்கு சரி நிகராக ஒரு படை உருவாகும் என கனவிலும் எண்ணவில்லை !

அந்தப் படை எது என்று கேட்க்கிறீர்களா ? அது தான் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆகும். ஒரு சில அமைப்புகளைத் தவிர ஏனைய அமைப்புகள் அனைத்தும் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதத்தில் வளர்ந்துள்ளது. இந்த அபரிவிதமான வளர்ச்சி இலங்கை அரசை திண்டாட வைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீது எவ்வாறு பழியைச் சுமத்தியதோ அதே பாணியை, தற்போது தமிழர்கள் கையாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது புலிகள் தற்கொலைப் படையை வைத்துள்ளார்கள், சிறுவர்களைப் படையணியில் சேர்க்கிறார்கள், அவர்கள் ஒரு பயங்கரவாதிகள் என்று கூறி, சர்வதேசத்தில் புலிகளை வெற்றிகரமாக ஓரங்கட்டிய இலங்கை அரசின், கண்ணில் அதே பாணியில் தற்போது தமிழர்கள் விரலை விட்டு ஆட்டுகிறார்கள் என்றால் பாருங்களேன் !
புலிகளின் படைப்பலத்துக்கு ஒப்பான அரசியல் பலம் தற்போது புலம்பெயர் நாடுகளில் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. லண்டனில் இருக்கும் தமிழர்கள் சில நாடுகளை வளைத்துப்போட்டு, தமது காய் நகர்த்தல்களை மேற்கொள்ள, கனடாவில் உள்ள தமிழர்கள் மேலும் சில நாடுகளூடாக தமது காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். போதாக்குறைக்கு ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தமது பங்கிற்க்கு அந்த அந்த நாட்டு தலைவர்களைப் வளைத்துப்போட்டு, இலங்கைக்கு எதிராக திருப்பி வருகின்றனர். இலங்கை அரசால், இதனைச் சமாளிக்கவே முடியவில்லை.

எந்த நாட்டில் இருந்து ஆரம்பித்து, தனது அரசியலை நடத்தவேண்டும் ? எந்த எந்த நாடுகளுக்கு தனது இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் என்று இலங்கை அரசே குழம்பிப்போயுள்ளதாம். இதில் சில நாடுகள் தமிழர்களுக்கு எதிராக இருப்பதாக பொய்யான பரப்புரைகளும் நடக்கிறதாம். இதனையடுத்து அன் நாட்டோடு தாம் பேசத் தேவையில்லை என்று இலங்கை அரசு, நினைத்திருக்கும் வேளை தீடீர் என்று பார்த்தால், அது ஐ.நாவில் இலங்கைக்கு எதிராகச் செயல்படுகிறது என்று, இலங்கை இராஜதந்திரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்கள்.
 புலிகளை ஓரங்கட்ட அரசு பாவித்த யுக்திகள் போல, இலங்கையில் போர் குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல், சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, பத்திரிகைச் சுதந்திரம் என்று பல தரப்பட்ட குற்றச்சாட்டுகளை புலம்பெயர் தமிழ் சமூகம் சுமத்திவருகிறது. இதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.

சர்வதேசத்துக்கு பிடிக்காத சில விடையங்கள் உள்ளது. இவை என்ன என்று ஆராய்ந்து அது தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை மீது, மிகவும் சாதூரியமாக புலம்பெயர் சமூகம் சுமத்திவருவதாக சிங்கள ஊடகம் ஒன்று மேலும் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, புலம்பெயர் சமூகத்தை புலிகளின் முன்னணி அமைப்பு என்று இலங்கை சொல்லி வருவது தற்போது அடிபட்டுப்போயுள்ளதாகவும் இக் கூற்றை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே மே 18ம் திகதிக்குப் பின்னர், புலத்தில் புதிய படை ஒன்று உருவாகியுள்ளது என்றும் , அது இலங்கை அரசுக்கு சரி நிகரான செல்வாக்கோடு, ஒரு நாட்டிற்கு இருக்கும் சகல அந்தஸ்தோடு அது இயங்கிவருவதாகவும் சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இவ்வமைப்புகளை அவ்வளவு எழிதில் அழித்துவிட முடியாது. மகிந்தர் இனி வருங்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்று அவ்வூடகங்கள் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

0 கருத்துக்கள் :