13 ஒழிப்புக் கோஷத்தின் பின்னணியில் மஹிந்தவே; போட்டுடைக்கின்றார் பொன்சேகா

5.11.12

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை, ஒரு திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையெனத் தெரிவித்த முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, 13 ஒழிப்புக் கோஷத்தின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷவே செயற்பட்டு வருகின்றார் என்றும் குறிப்பிட்டார். பிரதம நீதியரசருக்கு எதிராக அரசு கொண்டுவந்துள்ள அரசியல் குற்றவியல் பிரேரணை, நாட்டில் சர்ச்சையைக் கிளப் பியுள்ள 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்த சரத் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது: சமுர்த்தி நிதியான 80 பில்லியன் ரூபா வைக் கொள்ளையடிக்கும் நோக்கில் தான் அரசு "திவிநெகும' என்ற சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத்தான் பிரதம நீதியரசரைப் பழிவாங்கும் நோக்கில் அது செயற்படுகின்றது. இதன் ஓர் அங்கமாக பிரதம நீதியரசருக்கு எதிராகக் அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசின் இந் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தனிப்பட்ட ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கையாகும். அரசில் அங்கம் வகிக்கும் புலமையற்றவர்களே அந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கையென மீண்டுமொரு தடவை கூறிக்கொள்கின்றேன். ஷிராணி பண்டாரநாயக்க நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசராவார். எனவே, அவர் விடயத்தில் அரசு மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளது. அதேவேளை, நாட்டிலுள்ள பிரச்சினைகளை மூடிமறைக்கும் நோக்கில்தான் அரச தரப்பினர் தற்போது 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை ஒழிப்பது குறித்துப் பேசுகின்றனர். சில அமைச்சர்களை ஏவிவிட்டு இதன் பின்னணியில் ஜனாதிபதிதான் செயற்படுகின்றார். நாட்டில் இன்று எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் அரசு ஏன் இந்த விடயத்தைத் தூக்கிப்பிடிக்க வேண்டும்? மக்களைத் திசைதிருப்பவே அரசு இவ்வாறு செய்கின்றது. தற்போது இருக்கின்றது போல 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் இருக்கட்டும் என்றார்.

0 கருத்துக்கள் :