புதுக்குடியிருப்பு பகுதியில் 1,000 குடும்பங்களுக்கு காணி இல்லை; 1,000 ஏக்கர் கேட்கிறது இராணுவம்.

14.11.12

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள 1,111 குடும்பங்கள், தமக்கு சொந்தக் காணி இல்லையென புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடம் காணி கோரி விண்ணப்பித்திருக்கின்றன. இதேவேளை இந்தப் பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தை அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மாவட்டச் செயலகத்திடமும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடமும் கோரியுள்ளனர். இந்த விவரங்கள் மாவட்டச் செயலக, பிரதேச செயலக காணி பிரிவு மற்றும் புள்ளிவிவரக் கிளைகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளில் 1,111 பேர் தமக்கு சொந்தக் காணி இல்லை என விண்ணப்பித்துள்ளனர். சொந்தக் காணி இல்லாததால் வீட்டுத் திட்டம், வாழ்வாதார உதவித் திட்டம் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான எந்த உதவிகளையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாவில்லை. நீண்ட காலமாக இரவல் காணிகளில் குடியிருப்பதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை, இதே 19 கிராம சேவகர் பிரிவுகளில் ஆங்காங்கே நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அந்தப் பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியைத் தமக்குத் தரகக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதனைவிட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இதுவரை உள்ளன. இதனால் கடை உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வாழ்வாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிப்பதுடன் குறித்த கடைத் தொகுதிகளை தம்மிடம் மீளத் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :