போர் குற்றம் பற்றி பேச மறுக்கும் லண்டன் வந்துள்ள சிங்கள தூதுக்குழு

30.10.12

இலங்கையில் இருந்து, ஆழும் கட்சி , எதிர்கட்சி முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் லண்டன் வந்துள்ளார்கள். தாம் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவே தாம் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை ஒரு மக்கள் சந்திப்பொன்றை அவர்கள் நிகழ்த்தியிருந்தார்கள். அதில் 25க்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர். மக்கள் பலர் கலந்துகொள்ளவில்லை என்று பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் ஒரு கலந்துரையாடலை அவர்கள் மேற்கொண்டனர். இதில் கலந்துகொண்ட தமிழர்கள் சிலர் இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்க்க ஆரம்பித்ததால் குழப்பம் ஆரம்பமானது. இலங்கையில் இருந்து வந்தவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் சென்றனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதற்கு அமைவாகச் செல்லவில்லை. இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், எனவே போர் குற்ற விசாரணை மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று அவர்கள் கூறினார்கள். இதனை அடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியது. போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை தேவை என்று பிரிட்டனின் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இலங்கைத் தூதுக்குழுவினர் தங்களுக்குள், தாமே முரண்பட்டுக்கொண்டனர். அதாவது போனவருடம் இத் தூதுக்குழு லண்டன் வந்தவேளை சர்வதேச விசாரணை தேவை என்று தமிழர்கள் கூறினார்கள் இதனை இலங்கை சென்று பரிந்துரைக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுபோல இதனை தாம் இலங்கை சென்ற பின்னர் அரசுக்கு தாம் பரிந்துரைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு தாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இதே தூதுக்குழுவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ கூறினார். இலங்கையில் நடந்த யுத்தத்தின்போது நடந்ததாகக்கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீதோ அல்லது இலங்கை இராணுவம் மீதோ விரல் நீட்டுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதாவது நீங்கள் ஒரு விடையத்தை இங்கே நன்கு கவனிக்கவேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு தாம் உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு திரியும் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரே இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதனை நாம் இதனை வைத்தே கணிப்பிட முடியும். இப்போது தமிழர்களுக்கு புரியவேண்டும் ஏன் இலங்கை அரசு யுத்தத்தில் வென்றது என்று. எவ்வாறு தமிழர்களே தமிழர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தார்கள் என்று புரியும். கருணா, கே.பி போன்றவர்கள் செயல்களை நாம் மறந்துவிடமுடியாது.

0 கருத்துக்கள் :