பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு – இலங்கை தொடர்பில் இந்தியா எச்சரிக்கை பேச்சு!

11.10.12

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவிக்கிறார். ஆட்கடத்தல், துஷ்பிரயோகம், மனித உரிமை, தேர்தல், மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகள், மாவை சேனாதிராஜா, மன்மோகன் சிங், மீள்குடியேற்றம், இலங்கை சுதந்திரக் கட்சி, சம்பந்தன், போர், வன்முறை, சோனியா காந்தி இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி வந்துள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தர், அந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக தெரிவித்தார். இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் இந்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து கிருஷ்ணா விளக்கியதாகவும், தங்களது முயற்சிகள் தாங்கள் எதிர்பார்த்த விதத்தில் இன்றுவரை பலனளிக்கவில்லை என்று அவர் தெரிவித்ததாகவும் சம்பந்தர் கூறினார். தாங்கள் பொறுமை காத்து வருவதாகவும், ´அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு´ என்று கிருஷ்ணா கூறியதாகவும் சம்பந்தர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான, தங்கள் தரப்பு முயற்சிகளையும், கருத்துக்களையும் கிருஷ்ணாவிடம் எடுத்துரைத்ததாக சம்பந்தர் கூறினார். தங்களது மக்கள் ஏமாற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும் நியாயமான அரசியல் தீர்வு காண்பதற்கு எல்லோரும் ஒத்துழைத்து, அந்தத் தீர்வைக் காணலாம் என்றால், அந்தப் பாதையில் செல்வதற்குத் தயார் என்றும் சம்பந்தர் கூறினார். இனப்பிரச்சனை தொடர்பில் இலங்கை அரசு பிரேரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவைப் பொருத்தவரை, அதில் தமிழ்க் கூட்டமைப்பு இடம்பெற வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்படவில்லை என்று தெரிவித்த சம்பந்தர், அதே நேரத்தில் அதில் சேர மாட்டோம் என்று தாங்களும் கூறவில்லை என்றும் தெரிவித்தார். அரசுத் தரப்பில் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டத்துடன் அதை ஆராயத் தயார் என்றும், ஆனால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் செல்ல தாங்கள் தயாராக இல்லை என்றும் சம்பந்தர் தெளிவுபடுத்தினார். ´தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அரசுக்கு ஏற்கெனவே தெரிவித்திருந்த போதிலும் அரசு இதுவரை அதற்கு பதில் தரவில்லை. இருதரப்பு பேச்சில் ஏற்படும் உடன்பாட்டை பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்குக் கொண்டு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அரசு நடந்துகொள்ளவில்லை. அதனால், பாராளுமன்றக் குழுவில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஏமாற்றத்தில் முடியலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும், நியாயமான தீர்வை ஏற்படக்கூடிய நிலைமை இருந்தால் அதைப் பரிசீலிக்கத் தயார்´ என்றும் சம்பந்தர் கூறினார். அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தைப் பொருத்தவரை, நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி மக்களிடம் ஆலோசித்து பரிசீலிக்கத் தயார் என்றும் சம்பந்தர் தெரிவித்தார்

0 கருத்துக்கள் :