பிரித்தானிய தமிழர் பேரவையின் ஈழத்தமிழர் மாநாட்டில் தமிழக கட்சிகள்?

29.10.12

பிரித்தானியாவில் வரும் 6ம் திகதி முதல் 9ம் திகதிவரை நடைபெறவுள்ள ஈழத் தமிழர் மாநாடு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றினுள் நடைபெறும் இம் மாநாட்டிற்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் வருவார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை ஒரு பிரச்சனை ஆக்குவதே சில ஊடகங்கள் தான். இதைவைத்து அரசியல் நடுத்துவதும், வருவார்களா வரமாட்டார்களா என்று சில ஊடகங்கள் வழமைபோல பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்துவிட்டனர். தினமலர் போன்ற ஊடகங்கள் ஆரூடம் சொல்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான். இதேபோல தி.மு.காவினர் இம் மாநாட்டில் கலந்துகொள்வதால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்று, செய்தி வெளியிட்டது தினமலர்.ஆனால் தான் இம் மாநாட்டிற்குச் செல்லவிருப்பதாக, டாக்டர். ராமதாஸ் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இன்று பேட்டி கொடுத்துள்ளார். இதுபோலவெ திரு வைகோ அவர்களின் கட்சியான மதிமுக, இதில் பங்கேற்காது என்றும் சில செய்திகள் தமிழ் நாட்டில் அரசல்புரசலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இக் கட்சியில் இருந்தும் லண்டன் மாநாட்டிற்கு பலர் வரவுள்ளனர் என்பதே உண்மையாகும். மாநாட்டை நடத்தும் பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF), மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்கள். தமிழ் நாட்டிலேயே 3 கட்சி ஒன்றாக இணைந்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது என்பது கடினமான விடையம் என்பது எம்மில் பலருக்குத் தெரியும். அரசியல் சர்ச்சைகள், கட்சிக்குள் இருக்கும் பாகுபாடுகள், தலைவர்களுக்கு மத்தியில் இருக்கும் அரசியல்வேறுபாடுகள் என்று அவர்களுக்குள் பல விடையங்கள் இருக்கிறது.

ஆனால் இவ்வாறு, பல்வேறு இடங்களில் சிதறுண்டு கிடக்கும் பல கட்சிகளையும், அதன் மூத்த தலைவர்களையும் ஈழப் பிரச்சனை ஊடாக இணைத்து, பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) இம் மாநாட்டை நடத்துகிறது. தமிழ் நாட்டில் உள்ள சுமார் 99% வீதமான அரசியல் கட்சிகள் இம் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறது என்பது ஈழத் தமிழர்களுக்கு பெரும் ஊக்கமான செய்தியும் கூட. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதிதேவை ! இதுவே இம் மாநாட்டின் தாரக மந்திரம். எனவே நடத்தப்பட்ட கொலைக்கு சர்வதேச சுயாதீன விசாரணை தேவை. இதனை தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பிரித்தானியாவில் வலியுறுத்தப்போகிறார்கள். பிரித்தானியாவில் ஆட்சி புரியும் அதி உச்ச தலைவர்களை, தமிழ் நாட்டில் இருந்துவரும் கட்சிகள் சந்தித்துப் பேசும். அதாவது மாநாடு முடிந்த பின்னர், இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள், தம்மோடு கூட்டு வைத்திருக்கும் பிற மாநிலக் கட்சிகளோடு பேசி, பல எம்.பீக்களை ஒன்றிணைத்து சர்வதேச சுயாதீன வீசாரணை தேவை என்ற பிரேரணையை இந்திய பாராளுமன்றில் கொண்டுவரும். இது ஒரு பாரிய இராஜதந்திர நகர்வாக அவதானிக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை நாட்டவே பிரித்தானிய தமிழர் பேரவை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.எனவே சில பரபரப்புத் தேடும் ஊடகங்கள் தெரிவிப்பதில் எதுவித உண்மையும் இல்லை. கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று நாம் போராடுகிறோம். இக்குற்றத்தைப் புரிந்தவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவேண்டும் என்று கேட்கிறோம் அவ்வளவு தான் என்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

0 கருத்துக்கள் :