டக்ளஸ் தேவானந்தா மனுவை நிராகரித்து நேரில் ஆஜராகுமாறு நீதிபதி அதிரடி உத்தரவு

18.10.12

டக்ளஸ் தேவானந்தா தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கொன்பரன்ஸ் மூலம் விசாரிக்க அனுமதி கோரியிருந்தார். அந்த மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது, திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடியாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,”தன்னை வீடியோ கொன்பரன்ஸ் மூலம் விசாரித்து,தனக்கு எதிரான பிடியாணையை ரத்து செய்யவேண்டும் ” என்று கூறியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை செசன்ஸ் நீதிமன்றம்,டக்ளஸ் தேவானந்தா மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

0 கருத்துக்கள் :