ஈழவிடுதலை அமைப்புகள் தொடர்பில் இந்திய -சிறீலங்கா புலனாய்வு பிரிவினர் தகவல் பரிமாற்றம்

7.10.12

தமிழகத்தில் இயங்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மூன்று இயக்கங்களுடன் விடுதலைப்புலிகள் தொடர்புகளை வைத்திருப்பது குறித்து இந்திய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்று கொழும்பினை அடையாளம் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான தகவல்களை இந்திய - சிறீலங்கா புலனாய்வு பிரிவினர் தகவல்கள் பரிமாறிக்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் சட்டமா அதிபர் இலங்கேஸ்வரனின் மனைவி தனது கணவர் இறந்து விட்டதாக கூறி ஆவணங்களை சமர்பித்து கடவூச்சீட்டு ஒன்றை பெற்று கொண்டு தமிழகத்திற்கு செல்ல முயற்சித்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டார். இவர் தமிழகம் செல்ல அங்குள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உதவி இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கட்சி தமிழ் தேசிய விடுதலை இராணுவத் உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் செயற்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வன்னியில் புலிகளின் பதுங்குகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் இருக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் யார் யார் என்ற தகவல்கள் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் உணர்வாளர்களினால் சிறீலங்கா அரசிற்கும் சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த இந்திய புலனாய்வு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துவெளியிட்டுள்ளார்கள் தமிழகத்தில் உள்ள தமிழ்உணர்வாளர்களின் செயற்பாட்டினை சிறீலங்கா அரசினை ஆதாரம் கொண்டு இந்திய உளவுத்துறை கட்டுப்படுத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :