பெருந்தொகையான ஆயுதங்கள் அரியாலையில் வீட்டு கிணற்றில் மீட்பு

10.10.12

யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை யாழ். பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த ஆயுதங்கள் மீட்கும் பணி நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று மதியம் முழுவதும் நடைபெற்றதாக யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப்பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச்சென்ற பொலிஸாரும், இராணுவத்தினரும் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் இணைந்து இவற்றை மீட்டெடுத்தனர். பொலித்தீன் பைகளில் வைத்து சுற்றப்பட்டும், சில வகைக் குண்டுகள் இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் மிகவும் பாதுகாப்பாக கிணற்றுக்குள் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. மோட்டார் குண்டுகள் 240, கிளைமோர் குண்டுகள் 2, 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 8, கைக்குண்டுகள்42 குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் கருவிகள், துப்பாக்கி ரவைகள் ஆயிரத்து 615 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டன. இவற்றை மீட்கும் பணி நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் நேற்றுமதியம் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டன என்றும் அவற்றைச் செயலிழக்க வைக்கவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொதுவாக வன்னியில் அநேகமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்திலும் பெருமளவு குண்டுகள் மீட்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :