இன்னொரு அரசு பொறுப்பேற்றாலும் இது இந்தியா என்ற நாட்டின் நிலை

21.10.12

இந்திய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில், அண்மையில் புதுடெல்லி சென்று திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான இரா.சம்பந்தன், இந்தப் பயணம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ளார். புதுடெல்லிச் சந்திப்புகளின் போது, இந்தியத் தரப்பின் மனோநிலை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ள அவரது செவ்வியின் ஒரு பகுதி - “புதுடெல்லியில் நாங்கள் மிகவும் மரியாதையாகவே நடத்தப்பட்டோம். பிரதமர் மன்மோகன்சிங் எம்மை மிகவும் உபசாரமாக நடத்தினார். சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களின் நியாயமான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது என்றும் சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்கள் அவற்றை அடைவதை உறுதிப்படுத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார். அதற்காக என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்வேன் என்றும் மன்மோகன்சிங் கூறினார். புதுடெல்லி சந்திப்புகள் மிகவும் நன்றாகவே அமைந்தன. பிரதமர் மன்மோகன்சிங் அளித்த வாக்குறுதியுடன் நாம் எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜை சந்தித்தோம். அவர், இந்தியப் பிரதமரின் உறுதிமொழி குறித்து கருத்து வெளியிடுகையில், “இது இந்தியா என்ற நாட்டின் நிலை. இது இந்திய அரசினது நிலைப்பாடு மட்டும் அல்ல. இன்னொரு அரசு பொறுப்பேற்றாலும் கூட, ஒரு நாடு என்ற வகையில் இதுவே இந்தியாவின் நிலையாக இருக்கும்” என்று கூறினார். எந்தக்கட்சி புதுடெல்லியில் ஆட்சியில் இருந்தாலும் இதுவே இந்தியாவின் நிலை என்று சுஸ்மா சுவராஜ் விளக்கமளித்திருந்தார். “ஒரு நாடு என்ற வகையில், இந்த நிலைப்பாட்டுக்குப் பின்னால் நாம் நிற்போம். தமிழர்களின் பக்கம் தமிழ்நாடு அரசாங்கம் மட்டும் நிற்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் பக்கம் உள்ளது. தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன” என்றும் சுஸ்மா சுவராஜ் எம்மிடம் தெரிவித்தார். இது மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடிய பயணமாக அமைந்தது. கடந்த காலங்களில் இடம்பெற்ற எமது பயணங்களை விட, மிகவும் நல்ல பயணமாக இது அமைந்தது என்றே சொல்ல வேண்டும். தமிழர் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை சாதகமானதாகத் தெரிகிறது. அவர்கள் இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, எவற்றையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் பயன்படுத்தப் போகிறார்கள். அவர்கள் கூடிய விரைவில் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் எமது கோரிக்கைகள் நிலைப்பாடுகள் எளிமையானவை என்றும், பொறுப்பு வாய்ந்தவை என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடக்கூடாது என்று அவர்கள் உணர்கிறார்கள். புதுடெல்லியில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக எம்முடன் பேசிய ஒரே ஒருவர் பிரதமர் மன்மோகன்சிங் மட்டும் தான். எம்முடனான உரையாடலின் தொடக்கத்தில், நாம் ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கம் தெரிவுக்குழு பற்றி தன்னுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் அதுபற்றிக் குறிப்பிட்டாரே தவிர, எம்மை அதில் பங்கேற்குமாறோ, வேறு எதையும் செய்யுமாறோ கூறவில்லை. இந்தியத் தரப்பில் எவருமே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு பரிந்துரைக்கவில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கின் உரையாடலில் கூட, நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமே அரசியல்தீர்வு ஒன்றைக் காண முடியும் என்று சிறிலங்கா அரசு சொல்வதாக ஒரு குறிப்பு மட்டும் இடம்பெற்றது.” என்று அந்தச் செவ்வியில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்."புதினப்பலகை"

0 கருத்துக்கள் :