‘இனி மாணவர்களை அடித்தால், பெயிலாக்கினால்… மவனே சங்குதாண்டி!’

29.10.12

இனி மாணவர்களை அடித்தாலோ, ட்யூஷன் சேரச் சொல்லி, அதிக பணம் கட்டச் சொல்லி வற்புறுத்தினாலோ ஆசிரியர்கள் – பள்ளி நிர்வாகத்துக்கு சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் வருகிறது. மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது. இந்திய பள்ளிக் கல்வி சரித்திரத்தில் இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கான கடிவாளமாக இந்த சட்டம் அமையும். பள்ளிக் கூடங்களில் ஆசிரிய, ஆசிரியைகள் மீது எக்கச்சக்க புகார்கள் குவிகின்றன. மாணவர்களை அடிப்பதாகவும், குறித்த கடையில்தான் சீருடைகள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வாங்க கூறுவதாகவும், தங்களிடம் டியூசன் படிக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் என ஆரம்பித்து, செக்ஸ் டார்ச்சர் வரை புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, ‘பள்ளிக் கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்றுகிறது. இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: *மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது. *குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக்கூடாது. அதேபோன்று வேண்டும் என்று மாணவர்களை `பெயில்’ ஆக்கக்கூடாது. *பள்ளிக்கூடம் பற்றிய குறிப்பேட்டுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மாணவர் சேர்க்கை தேர்வுக்கும் கட்டணம் விதிக்கக்கூடாது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் (பள்ளிக்கூடம் பற்றியது, மாணவர் சேர்க்கை தொடர்பானது) இணைய தளத்தில், பள்ளிக்கூட விளம்பர பலகையில் இடம் பெற செய்ய வேண்டும். *பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும். *விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம், நன்கொடை வசூலிக்கக்கூடாது. *பள்ளிக்கூடங்கள் தவறான தகவல்களை விளம்பரங்களாக வெளியிட்டால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம். *6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கலாம். *எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற நோய்கள் தாக்கிய மாணவர்களை, நோயை காரணம் காட்டி பள்ளிகளிலிருந்து நீக்க தடை விதிக்கப்படுகிறது. மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும். நன்கொடை, கல்விக் கட்டணம் போன்றவற்றில் இந்த மசோதாவின் விதிகளை மீறும் பள்ளிகளை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அரசே ஏற்கவும் வழிவகை செய்யப்படுகிறது. இந்த வரைவு மசோதா, நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடக்கவுள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் அதை சட்டமாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

0 கருத்துக்கள் :