எரிக் சொல்ஹேம் கூற்றை மறுத்திருக்கும் வி.உருத்திரகுமாரன்

9.10.12

சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கையானது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதனையே வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் காட்டியுள்ளன. மேற்படி நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேம் அவர்களின் கூற்றுக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மறுத்துரைப்பு தெரிவித்துள்ளார். இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் அவர்கள் சர்வதேச ஊடகமான பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியொன்றில் 2009ம் ஆண்டு இலங்கையில் பாரிய மனிதப்பேரழிவினை தடுக்கும் பொருட்டு ஐ.நாவின் பின்னணியில் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த ஒரு யோசனையை விடுதலைப் புலிகள் நிராகரித்தனர் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எரிக் சொல்ஹேம் அவர்களின் கூற்று தொடர்பில் பதிலுரைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்கா மற்றும் நோர்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்டத்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்டதாகவும், இந்தக் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது, ஆனால் எழுத்து மூலமாக எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை, எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அக்கூட்டத்தில் ஒரு விரிவான போர் நிறுத்தம் குறித்து விடுதலைப் புலிகள் முன்வைத்ததாகவும், சார்க் மாநாட்டை ஒட்டி 2008 ஆம் ஆண்டு யூலை மாதம் ஒரு வாரகால அளவுக்கு ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தும், அதை நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று கூறிய யோசனைகளை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் ரத்தக் களறியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறிலஙங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், புலிகள் சரணடைந்திருந்தால் கூட அதை தவிர்த்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :