முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கம் !

23.10.12

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களை கொண்ட வெலிஓயா என்ற புதிய பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண த்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் எல்லையாக இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மணலாறு என்ற தமிழ் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு கடந்த பல வருடங்களாக இந்த சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தனி பிரதேச செயலகப்பிரிவாக பிரகடனப்படுத்தப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு வசதியாக அனுராதபுரமாவட்ட நிர்வாகத்தில் இணைக்கப்பட்டிருந்த மணலாறு என்ற வெலிஓயா பகுதி தற்போது முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த மணலாறு பிரதேசத்தை பிரித்தெடுத்து அனுராதபுர மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அங்கு பாரிய சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்திய பின்னர் தற்போது வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவு ஒன்றை புதிதாக உருவாக்கிய பின்னர் அதனை மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்துள்ளனர். 19கிராம ங்களை கொண்ட 9கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3536 குடும்பங்களை சேர்ந்த 11789 சிங்களவர்கள் வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவில் குடியேற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலத்தொடர்பை துண்டிக்கும் வகையில் இந்த இரு மாகாணங்களையும் பிரிக்கும் வகையில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலகப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே துணுக்காய், மாந்தைமேற்கு, ஒட்டுசுட்டான், கரைத்துறைபற்று, புதுக்குடியிருப்பு, ஐந்து பிரதேச செயலக பிரிவுகள் உள்ளன. தற்போது வெலிஓயா என்ற நூறு வீதம் சிங்களவர்களை கொண்ட பிரதேச செயலக பிரிவும் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிங்கள குடியேற்ற பகுதிக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற திட்டத்தின் கீழ் வெளிநாட்டு உதவிகளும், வீட்டு திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. சில காலத்திற்கு முன்னர் வவுனியா தெற்கில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளப்பட்டு முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்டதாக வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவு அமைக்கப்பட்டது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் தனியான சிங்கள பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்கள் தனித்தமிழ் மாவட்டங்கள் என்பதை முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் பிரதேச செயலகப்பிரிவுகள் மூலம் எதிர்காலத்தில் மேலும் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதுடன் மாகாண மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களிலும் சிங்களவர்களின் தொகை அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=36442

0 கருத்துக்கள் :