சீற்றத்தில் கோத்தா...

29.10.12

13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போருக்குப் பிந்திய அரசியல் மூலோபாயம் இதை விட மாற்று வழி எதையும் விட்டுவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, இலங்கை அரசும், எதிர்க்கட்சிகளும், அனைத்துலக சமூகமும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். வடக்கில் நிரந்தரப் படைத்தளங்களை அமைப்பதற்கான உதவிகளை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு 13 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, முடிவு செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போரிடும் திறனை அழித்து விட்டதற்காக அரசு திருப்தியடைந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு தேவையற்றது. தமிழ்ப் பகுதிகளில் படைத்தளங்களை அமைப்பதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முட்டாள்தனமானது. போர்க்காலத்திலோ அமைதிக் காலத்திலோ படையினரின் நிலை கொள்ளல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசுக்கு உத்தரவிட முடியாது. 13 ஆவது திருத்தத்தில் ஒன்றுமில்லை. விடுதலைப் புலிகளால் தீவிரவாதத்தின் மூலம் அடைய முடியாததை இதன் மூலம் கூட்டமைப்பு அடைய முனைகிறது. நட்பு நாடுகளுடனான இலங்கை அரசின் உறவுகளை சீர்குலைக்க முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளின் விளைவுகளை இலங்கை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு தடவைகள் சீனர்கள் கொல்லப்பட்டபோது, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவிக்கவில்லை. 2001 தொடக்கம் 2009 மே வரையிலான காலப்பகுதியில் அவர்கள் வகித்த பங்கிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும். 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலின்போது, விடுதலைப் புலிகளே தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று இரா.சம்பந்தன் கூறியிருந்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் பகுதிகளில் வெளியாட்கள் குடியேற்றப்படுவதான குற்றச்சாட்டுகளின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெளியாட்களை குடியர்த்துவதற்கு இலங்கை அரசுக்கு எந்தத் தேவையும் இல்லை. ஆனால், நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கின்ற உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. மோதல் இடம்பெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியாக வாழ்கின்றனர். அதுபோலவே, ஏனைய மக்களுக்கும் நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கின்ற உரிமை உள்ளது. இதனை அரசியல்கட்சிகளோ, அரசியல்வாதிகளோ பிரச்சினையாக்கக் கூடாது என்றார் அவர்.

0 கருத்துக்கள் :