உல்லாசமாய்த் திரியும் கே.பியும்; சிறைகளில் வாழ்வைத் தொலைத்த அப்பாவி மக்களும்!

26.10.12

கே. பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஒரு தமிழர் மட்டுமல்ல ஈழத்தமிழ் மக்களுக்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகளையும் வழி நடத்திய தலைவர் பிரபாகரனுடைய நெருங்கிய சகாவாகவும் பல ஆண்டுகள் இருந்தவர். அவர் தற்போது இலங்கை அரசின் “செல்லப்பிள்ளை”. இலங்கை அரசு அவரை எவ்வாறு பயன்படுத்துகின்றதோ அல்லது இலங்கை அரசை கே. பி எவ்வாறு ஏமாற்றுகின்றார் என்பதோ நாம் முழுமையாக அறியாத விடயங்கள். ஆனால் கே. பி யை தங்கள் நண்பராக்கவும், அவரை எதிர்காலத்தில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள “தமிழர்களின் தலைவராகவும்” ஆக்குவதற்கு மகிந்தாவின் அரசாங்கம் முயன்று வருகின்றது என்பதும் பலரால் ஊகிக்கப்படும் விடயமாகும். இந்த கே. பி தொடர்பாக அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். “கே. பி பத்மநாதன் தற்போது தடுப்புக் காவலில் இல்லை. அவர் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமான சான்றுகளோ அன்றி முறைப்பாடுகளோ இல்லை. அவர் தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்கின்றார்”. என்று. இந்த அறிவிப்பை படிப்பவர்களில் பலர் மகிழ்ச்சியடையலாம். சிலர் ஆத்திரப்படலாம். அரசாங்கத்தோடு சேர்ந்து கே. பி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றாரே என்று சிலர் ஆதங்கப்படலாம். ஆனால் உலகில் வல்லமையுடன் செய்ற்பட்ட சில விடுதலை அமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கிய இந்த கே. பி இவ்வாறு அரசாங்கத்தின் கைப்பொம்மையாகவும் மாறிவிட்டாரே என்பது தான் இங்குள்ள கேள்வி. மறுபக்கத்தில் அண்மையில் இலங்கை அரசின் கொடிய சிறைகளில் ஒன்றான வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த பல வருடங்களாக அடைபட்டுக்கிடக்கும் சிறைக்கைதிகள் ஜனாதிபதி மகிந்தாவிற்கு எழுதிய கடிதமொன்றில் “ குற்றங்கள் எதுவும் செய்யாத நாங்கள் விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் எங்கள் வாழ்க்கையை தொலைத்தபடி இருக்க, பயங்கரவாதச் செயல்களிலும் ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்ட கே. பி வெளியே உல்லாசமாக நடமாடுகின்றாரே. இது என்ன நியாயம்” என்று கேட்டுள்ளனர். மேற்படி செய்தியை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையொன்று அண்மையில் வெளியிட்ட கேலிச் சித்திரம் ஒன்றை நாம் இவ்வார கதிரோட்டத்தோடு இணைத்து பிரசுரிப்பது அவசியம் என்று கருதுகின்றோம். எமது கடந்த வார கதிரோட்டம் கூட இலங்கைச் சிறைகளில் வாடுகின்றவர்களின் அவலக் குரலாகவே பிரசுரமாகியது. அதே போன்று இவ்வாரக் கதிரோட்டமும் மேற்படி சிறைகளில் படுமோசமான சித்திரவதைக்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகியிருக்கும் அவர்களுக்காக கவலைப்படும் நிலையில்hதான் உள்ளது. மேலும் சிறைகளில் உள்ள நமது உறவுகளின் கேள்விகளுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று ஏங்குகின்றவர்களில் சிலராகவே நாங்களும் உள்ளோம். இவ்வாறிருக்க, கே. பியின் இருப்பு சார்ந்த செயற்பாடுகளைதடுக்கும் வகையில் அல்லது சிதைக்கும் வகையில் எமது விமர்சனங்கள் பலமானவையாக அமையாது என்பதையும் நாங்கள் உணர்கின்றோம். நன்றி – கனடா உதயன்

0 கருத்துக்கள் :