கூட்டமைப்பினர் சீனத் தூதுவரை சந்தித்ததால் கடுப்பாகிய கோத்தபாய இந்தியா செல்கிறார்!

22.10.12

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போருக்குப் பிந்திய அரசியல் நிலை தொடர்பாக சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து கடுஞ்சீற்றமடைந்துள்ளார். இந்தநிலையில், விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, இலங்கை அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும், அனைத்துலக சமூகமும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். வடக்கில் நிரந்தரப் படைத்தளங்களை அமைப்பதற்கான உதவிகளை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 13வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, முடிவு செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போரிடும் திறனை அழித்து விட்டதற்காக இலங்கை அரசாங்கம் திருப்தியடைந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு தேவையற்றது. தமிழ்ப் பகுதிகளில் படைத்தளங்களை அமைப்பதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முட்டாள்தனமானது. போர்க்காலத்திலோ அமைதிக் காலத்திலோ இலங்கை படையினரின் நிலை கொள்ளல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசுக்கு உத்தரவிட முடியாது. விடுதலைப் புலிகளால் தீவிரவாதத்தின் மூலம் அடைய முடியாததை 13வது திருத்தத்தின் மூலம் கூட்டமைப்பு அடைய முனைகிறது. நட்பு நாடுகளுடனான இலங்கை அரசின் உறவுகளை சீர்குலைக்க முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளின் விளைவுகளை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு தடவைகள் சீனர்கள் கொல்லப்பட்ட போது, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவிக்கவில்லை. 2001 தொடக்கம் 2009 மே வரையிலான காலப்பகுதியில் அவர்கள் வகித்த பங்கிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும். 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலின் போது, விடுதலைப் புலிகளே தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று இரா.சம்பந்தன் கூறியிருந்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் பகுதிகளில் வெளியாட்கள் குடியேற்றப்படுவதான குற்றச்சாட்டுகளின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளியாட்களை குடியர்த்துவதற்கு இலங்கை அரசுக்கு எந்தத் தேவையும் இல்லை. ஆனால், நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கின்ற உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. மோதல் இடம்பெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியாக வாழ்கின்றனர். அதுபோலவே, ஏனைய மக்களுக்கும் நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கின்ற உரிமை உள்ளது. இதனை அரசியல்கட்சிகளோ, அரசியல்வாதிகளோ பிரச்சினையாக்கக் கூடாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2ம் இணைப்பு இந்தியா செல்கிறார் கோத்தா – 13வது திருத்தம் குறித்துப் பேசப் போகிறாராம்! இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பதன் அவசியம் குறித்து தான் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய - இலங்கை உடன்பாட்டின் மூலமே 13வது அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதேவேளை, இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணப் போவதாக, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய அரசியல் தலைவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்தநிலையிலேயே கோத்தபாய ராஜபக்சவும், சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் 13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், கோத்தபாய ராஜபக்ச இதுவரை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :