சீனா போட்டுக் கொடுத்த ஓடுபாதையில் முதன்முதலாகத் தரையிறங்கியது பாகிஸ்தான் விமானம்

17.10.12

அம்பாந்தோட்டையில் சிறிலங்காவுக்கு சீனா கட்டிக்கொடுக்கும் மத்தால அனைத்துலக விமான நிலையத்தில் பாகிஸ்தான் நாட்டு விமானம் முதல் முறையாக தரையிறங்கியுள்ளது. மத்தால விமான நிலையத்தின் ஓடுபாதையில் நேற்று நண்பகல் பாகிஸ்தான் குடியியல் விமானத் திணைக்களத்தின், இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட பீச் கிராப்ட் என்று அழைக்கப்படும் சுப்பர் கிங் 20 விமானம் தரையிறங்கியது. பாகிஸ்தான் நாட்டு விமானி செலுத்திய இந்த விமானம் பிற்பகல் 12.45 மணியளவில் மத்தாலவில் இருந்து கட்டுநாயக்கவுக்குப் புறப்பட்டுச் சென்றது. சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் மத்தால விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடையும் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பரீட்சார்த்தமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது விமான நிலைய கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்துவதற்கான சோதனை நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இந்த விமானம் சிறிலங்காவில் இருந்து பரீட்சார்த்த தரையிறக்க சோதனைகளை மேற்கொள்ளும். மத்தால அனைத்துலக விமான நிலைய கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்து விடும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குடியியல் விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :