இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சார்பாக அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

5.10.12

பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படலாம் என அடையாளம் காணப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்க முடியும் என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அடையாளப்படுத்தப்பட்டோருக்கு புகலிடம் வழங்க முடியாது என அந்நாட்டு பாதுகாப்புப் புலனாய்வு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆயினும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்ற நீதவான்கள் தெரிவித்துள்ளனர். எம்47 என அடையாளப்படுத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை திருப்பி அனுப்புவது தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதவான்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பானது இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதோ அல்லது வேறும் நாட்டுக்கு அனுப்பி வைப்பதோ கூடாது என நீதவான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எம் 47 என்ற இலங்கையர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எனவும், 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு ஜூன் மாதம் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள அவரினால் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று கூடிய அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

0 கருத்துக்கள் :