எமது நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு; யாழில் முழங்கினர் மக்கள்

17.10.12

நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்ச்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் இடம்பெற்ற இவ் கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ்.பஸ் நிலையத்தின் முன்பாக முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது. இவ் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அரசே ஜனநாயகத்தை உறுதி செய்! வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, தாக்காதே தாக்காதே உள்ளூராட்ச்சி தலைவர்களை தாக்காதே, எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், அரசே ஜனநாயகத்தை சீண்டாதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்கள் எங்கே, எமது நிலம் எனக்கு வேண்டும் எமது தாயகமே எமக்கு வேண்டும், மக்கள் பிரதிநிதிகளை தாக்காதே, எமது உரிமை எமக்கு வேண்டும் ,போன்ற கோசங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இவ் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறிதரன் மற்றும் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளூராட்ச்சி மற்ற தலைவர்கள் உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜலிங்கம் போன்றோர் கலந்து கொண்டனர். இவ் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்ற பகுதியினைச் சூழ அதிகமான இராணுவ புலனாய்வுத்துறையினரும் சிறீலங்கா காவல்துறையினரும் அப்பகுதியினைச் சூழ்ந்திருந்த நிலையிலும் தமிழ் மக்கள் தமது உரிமை முழக்கத்தினை முழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :