தமிழ் மக்கள் இராணுவத்தினரை சகோதரர்களாக ஏற்று வாழ பழகிக்கொள்ள வேண்டுமாம்

31.10.12

தமிழ் மக்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த காலம் மாறி சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டது என்று யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கூறியுள்ளார். இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் வசைபாடினார். தமிழ் மக்கள் ஏதிரிகளாகப் பார்த்த சிறிலங்கா இரானுவத்தினரை தற்போது காலம் மாறியுள்ளதால் சகோதரர்களாகவே தான் பார்ப்பதாகவும் அவ்வாறே தமிழ்மக்களும் கருத வேண்டும் என்றார். நாம் இலங்கைத்தீவில் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் வாழவேண்டும். கடந்த காலத்தில் புலிகளின் கருத்துக்களை மக்கள் செவி சாய்த்தபடியால் சிங்கள மக்களை நாம் எதிரிகளாக பார்க்கவேண்டிய கட்டாயம் எற்பட்டது. இதனால் தமிழ் மக்களின் எதரிகளாக இராணுவத்தினர் சித்தரிக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்களும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு இணைந்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழர்கள், சிங்களவர்கள் என்றதற்கப்பால் அனைவரும் இலங்கையராகவே வாழவும் வேண்டும் என்றார். அத்துடன் இலங்கையில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத இலவசக்கல்வி முறை இருக்கின்றது இதனால் மாணவர்கள் இங்கு கல்வி கற்று எமது நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்றும் கூறினார். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பொது மக்கள் சிவில் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் விக்னேஸ்வரன், யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கொண்டு 26 மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் வைப்பு புத்தகங்கள் என்பன வழங்கினர்.

0 கருத்துக்கள் :