கடாபி கொல்லப்பட்டு 1 ஆண்டுக்கு பின், ‘கடாபியின் முகம்’ செக் பாயின்டில் சிக்கிக் கொண்டார்!

22.10.12

கடாபி சிக்கிக் கொண்டு உயிரைவிட்ட பின் 1 வருடமாக தலைமறைவாக இருந்த அவரது பிரதம செய்தித் தொடர்பாளர், தற்போது சிக்கிக் கொண்டார். “மோசா இப்ராஹிம் இன்று கைது செய்யப்பட்டார். மதுஹோனா அருகேயுள்ள செக்-பாயின்ட் ஒன்றை அவர் கடக்க முயன்றபோது, அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்” என்ற சுருக்கமான செய்திக் குறிப்பு, லிபிய அரசு தகவல் அமைச்சின் செய்திப் பிரிவில் இருந்து வந்துள்ளது. வேறு விபரங்கள் ஏதுமில்லை. இந்த மோசா இப்ராஹிம்தான், கடாபி ஆட்சியின்போது, ‘கடாபியின் முகம்’ என்று கருதப்பட்டவர். கடாபி சார்பில் பேட்டிகள் கொடுத்ததெல்லாம் இவர்தான். கடாபி ஆதரவு ராணுவத்துக்கும், போராளி அமைப்புகளுக்கும் இடையே யுத்தம் நடந்தபோது, தலைநகர் ட்ரிபோலியில் வெளிநாட்டு செய்தியாளர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் தினமும் செய்தியாளர் மாநாடு வைத்தவரும் இவர்தான். வெளிநாட்டு செய்தியாளர்கள் பலருக்கு நன்று அறிமுகமான நபர் இவர். பிரிட்டனில் கல்வி பயின்ற இவர், சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர். இவரது மனைவி ஜெர்மன் நாட்டவர். யுத்தம் நடைபெற்ற நாட்களில், செய்தி சேகரிப்பதற்காக எந்த நேரத்திலும் இவரை தொடர்பு கொள்ளும் விதத்தில், தனது செல்போன் நம்பரை எம்மிடம் கொடுத்திருந்தார். அதிகாலை நேரத்திலும் போன் செய்தால், அட்டென்ட் செய்வார். தொடர்பில் இருந்த இறுதிவரை, தமது ராணுவம் ஜெயிக்கிறது என்பதையே சொல்லிக்கொண்டு இருந்தார். தமாஷ் என்னவென்றால், இவரும் யுத்தத்தில் இறந்திருப்பார் என்றுதான் லிபிய மக்கள் நினைத்திருந்தனர். நேற்று அதிகாலை மோசா இப்ராஹிம் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானபின், மதியம் மற்றொரு தமாஷ் நடந்தது. அவரது பேஸ்புக் பக்கத்தில், ஒரு ஆடியோ ரிக்கார்டிங் அப்லோட் செய்யப்பட்டது. அதில் இருந்த குரல், அச்சு அசலாக மோசா இப்ராஹிமின் குரலாகவே இருந்தது. “நான் கைது செய்யப்பட்டதாக வந்த தகவலை நம்ப வேண்டாம். நான் பத்திரமாக லிபியாவுக்கு வெளியே இருக்கிறேன். இவர்கள் என்னை கைது செய்ததாக குறிப்பிடும் மதுஹோனா பகுதிக்கு அருகில்கூட நான் இல்லை” என்றது அந்த ஆடியோ ரிக்கார்டிங். இது கடாபி ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. நேற்று இரவு லிபியாவின் துணை பிரதமர் முஸ்தஃபா அபு ஷாகுர் தமது ட்விட்டர் பக்கத்தில், “கிரிமினல் மோசா இப்ராஹிம் நிச்சயமாக கைது செய்யப்பட்டுள்ளார். பலத்த பாதுகாப்புடன் அவரை தலைநகர் ட்ரிபோலிக்கு கொண்டு வருகிறார்கள் ஆயுதப் படையினர்” என்று குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து இரவோடு இரவாக மோசா இப்ராஹிம் கைப்பற்றப்பட்ட பின் எடுக்கப்பட்ட போட்டோ வெளியானது.

0 கருத்துக்கள் :