குமரி மாவட்ட கடல் பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலைகள்.

3.9.12


குமரி மாவட்டம் குளச்சல், நித்திரவிளை கடல் பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுப்பி ஊருக்குள் புகுந்ததில் 100க்கும் அதிகமான படகுகள் சேதம் அடைந்தன. 20க்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் மேல் மிடாலம், குறும்பனை, வாணியக்குடி, கொட்டில்பாடு, கோடிமுனை, சைமன் காலனி, மண்டைக்காடு புதூர் உள்பட 20க்கும் அதிகமான கிராமங்களை சேந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுனாமி போல ராட்சத அலைகள் எழும்பின. இந்த அலைகள் துறைமுக திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கடல் அலை தடுப்பு சுவரையும் தாண்டி, மணல் பரப்பில் வந்து விழுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் அதிகமான பைபர் கட்டுமரங்கள் சேதமடைந்தன. அலை தடுப்பு சுவர் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களும் சரிந்து விழுந்தன. இதனால் அலை தடுப்பு சுவர் 3 துண்டுகளாக உடைந்தது.

குளச்சல் கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக 20க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதே போல் நித்திரவிளை பகுதியில் உள்ள இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை, நீரோடி ஆகிய கடல்பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென கடல் ஆக்ரோஷமாக அலைகள் எழும்பியது. இதனால் கடலரிப்பு தடுப்பு சுவரையும் தாண்டி, கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல பைபர் படகுகளை கடல் அலை இழுத்து சென்றது. இரயுமன்துறை மற்றும் பூத்துறை பகுதியில் பல வீடுகள் சேதமடைந்ததுள்ளன. மீன்துறை உதவி இயக்குனர்கள் ரூபர்ட் ஜோதி, ஐசக் ஜெயக்குமார் ஆகியோர் கூறுகையில், “கடல் சீற்றம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறோம்” என்றனர்.

0 கருத்துக்கள் :