இன்னும் எத்தனைநாளைக்கு இந்தப் பொறுமை

2.9.12


உலகில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டங்களில் தமிழினம் சந்தித்துள்ள அவலங்களை ஒரு சொல்லால் சொல்லிட முடியாதளவுக்கு அதன் நிறை மிகவும் கணமானது. அறுபது ஆண்டு காலமாக தமிழனத்தை சிங்கள இனம் அடிமைப்படுத்திக் கொண்டே முடிவில்லாது செல்கிறது.

பலதடவைகள் தமிழர்களின் உயிரை சிங்களம் பலியெடுத்திருந்தாலும் 2009 ஆண்டு தமிழர்களைப் பொறுத்தவரையில் அது சிவப்பு ஆண்டாகவே முடிவடைந்தது. வயிற்றிலிருந்த சிசு தொடக்கம் பல்லுவிழுந்த பாட்டன்வரைக்கும் உயிரிழந்த வலியுடன் கூடிய சுமையான ஆண்டாகவே தமிழர் நோக்குகின்றனர்.

தமிழர்களை சிங்களம் அவ்வப்போது தாக்கவில்லை, தொடர்ச்சியாகவே தாக்கிவருகின்றனர். இவ்வாறான சிங்களத்தின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் திரு, திருமதி வேலிப்பிள்ளை தம்பதியினருக்கு புதல்வனாக பிறந்தாரோ தெரியவில்லை. கூட்டாக இணைந்த போதிலும், சிங்களத்திற்கான எதிர்ப்பினை தனித்து நின்று வெளிக்காட்டினார்.

சிறுவயதில் தனது இனம் அழிக்கப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது, தனியொரு இளைஞனாக சிங்கள பேரினவாத சக்திகளை எதிர்க்கத் துணிந்தார். அன்று எல்லோரையும் போல் ஓடியொழிந்திருந்தால் இன்று தமிழன் என்ற நாமமே இல்லாதிருந்திருக்கும்.

சரியான தீர்க்கத் தரிசனத்துடன் செயற்பட்டவர்தான் தமிழர்களின் தேசிய தலைவர் மேதகு வேலிப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

சிறுவயதில் அடிமைத்தனத்தை சகித்துக் கொள்ள முடியாத சுயமரியாதை கொண்ட மனிதனாக செயற்பட்டதன் விளைவாகத்தான் இன்று உலக நாடுகளே தமிழர் என்றால் யார், அவர்களின் தனித்துவம் என்ன போன்ற விடயங்களுக்கு பதில் தேட ஆரம்பித்துள்ளனர்.

தமிழினத்திற்கு முகவரி வழங்கியவர்தான் தேசிய தலைவர் அவர்கள். ஆனால், இன்று போராட்டத்தின் நோக்கம், அதன் தன்மை, பின்விளைவுகள், எதிரியின் ஆதிக்கப் போக்கு போன்றவற்றை உணர்ந்து கொள்ளாத எம்மில் சிலர் தமிழ்ப் படையை குறைகூறலாம்.

உலகில் விடுதலை நோக்கிய போராட்டத்தின் போது, சில புல்லூருவிகள் தடைகளை ஏற்படுத்தும் போது அவற்றைக் களையெடுப்பது மிகவும் அவசியம், அவ்வாறான களையெடுப்புக்கள் மேற்கொண்டதன் விளைவாகத்தான் தமிழரின் ஆயுதப் போராட்டம் முப்பது வருட காலம் நீடித்திருக்கின்றது எனலாம்.

ஒரு கிராமமாக இருந்தால் அந்த கிராமத்தில் ஒருவர் தலைவராக இருப்பார் அவர்தான் கிராமத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைக்கும் பொறுப்பானவர். அந்தவகையில் கிராம மக்களை காப்பாற்றுவதுடன், அங்குள்ள வளங்களையும், சமூகம் சார்ந்த அனைத்திலும் கவனமெடுப்பார். அவ்வாறுதான் எமது இனத்திற்கான காவல்தெய்வமாக எமது தேசிய தலைவர் செயற்பட்டார்.

இன்று அந்த தெய்வம் இல்லையென்பதற்காக தமிழர் தாயகத்தில் சிங்கள வெறியர்களினால் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள், ஆக்கிரமிப்புக்களை எண்ணிலடங்காது அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

எமது தலைவர் தற்போதைக்கு இயங்காவிட்டாலும், அவரால் வளர்க்கப்பட்ட, சுயமரியாதை பற்றி கற்பித்துக் கொடுத்தவைகள் எம்மக்களிடையே ஒழிவுமறைவாக இருக்கின்றார்கள். அவற்றை ஒழித்து வைக்க முடியாது. முன்னொரு காலத்தில் தனி மனிதனாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று மக்கள் மயம் மட்டுமல்ல சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் தான் இன்று தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மக்கள் தமது உரிமையை வென்றெடுக்க முற்படும் போது எமது தலைவர் உரிய நேரத்தில் அதற்கான திட்டத்தை வகுத்து எமக்களிப்பார்.

இன்று தமிழர்களை மேய்ப்பவன் இல்லாத கால்நடைகளாக, சிங்களம் எம்மை நடத்துகின்றது. சிங்களத்திற்கு ஒரு சட்டம் தமிழர்க்கு ஒரு சட்டம் ஒரு நாட்டுக்குலேயே இரு சட்டதிட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றது.

இன்று தமிழர்களைப் பற்றி பேசுபவர்கள் நாங்கள்தான் எனக் கூறும் சிலர் சிங்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களையும், அடாவடித்தனங்களையும் பார்த்துக் கொண்டு வெறும் அறிக்கைகளை மாத்திரம் விடுதில்தான் கவனம் செலுத்துகின்றார்களே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.

தற்போது பேசப்படும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழர் சார்ந்த ஒரு முதலமைச்சரைப் பெறப்போவதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஒரு தமிழரைப் பெற்றால், தமிழ் மக்களுக்கான விடுதலை பெற்றுவிட முடியுமா?…

தேர்தல்கள் அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து தமிழர் சார்ந்த கட்சிகளுக்கே தமிழர்கள் வாக்களித்துவருகின்றனர். அதனால் தமிழர்கள் அடைந்த நன்மை என்ன?…, அல்லது தமிழ் பிரதிநிதிகளாக சென்றவர்கள் செய்த சாதனைதான் என்ன?… அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் கட்சிச் சண்டை, ஆசனச் சண்டை என சண்டை போட்டு முட்டிமோதியதுதான் மிச்சம்.

எமது விடுதலையை இந்தியா பெற்றுத் தரும், அமெரிக்கா பெற்றுத்தரும் என்பதெல்லாம் வெறும் வாய்வெட்டே தவிர ஆகப்போவது எதுமேமில்லை. என்பதனை தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையாகவே தமிழினத்திற்காகத்தான் போராடுகின்றோம் என்றால், தமிழ் பிரதிநிதிகள் என கூறுபவர்கள் தமது பதவிகளை துறந்து மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடத் தயாராக உள்ளார்களா?… அப்படியிருந்தால், வடக்கு கிழக்கு பகுதியில் சிங்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி ஏன் காலவரையறையற்ற போராட்டங்களை நடாத்தவில்லை.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான 22 பேரும் எவ்வாறு வழிநடத்தப்பட்டார்கள் என்பது அதில் இருந்தவர்களுக்த் தெரியும். முன்பு இருந்தவர்கள் தான் இன்றும் இருந்தாலும், அவர்கள் இன்று உண்மையான இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்பது நன்கு புலனாகிறது.

தமிழர்களின் குடியிருப்புக் காணிகள், பொதுத் தேவைக்கான காணிகள் என சிங்களம் அபகரித்து படைமுகாம் அமைப்பதற்கும், அத்துமீறிய குடியேற்றங்களையும் மேற்கொண்டுவருகின்றனர். இவை காலப் போக்கில் நிரந்தரமாக சிங்களம் குடியிருப்பாக காட்டுவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டுவருகின்றனர்.

இதனால், தமிழர்களின் குடிப்பரம்பரை குறைப்பதுடன், மக்கள் பிரதிநிதித்துவத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சர்வதேசம் எமது பிரச்சினைகளை பார்த்துக் கொள்ளும் என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, சிங்களம் தனது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கிறது.

இவையெவற்றையும் கவனத்தில் கொள்ளாது தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து தமது உரிமைகளை வென்றெடுக்க முன்வராது விட்டால் காலப் போக்கில் தமிழர் சரித்திரத்தை சிங்களவர்கள் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படிப்பார்கள் என்பதுதான் உண்மை.

எனவே, அவர் செய்வார், இவர் செய்வார் என்பதை விடுத்து நாம் செய்வோம் எனத் துணிந்து முன்வரவேண்டும். சிங்களம் அத்துமீறும் போது, தமிழர்கள் ஒன்றிணைந்து தமது எதிர்ப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அதனையும் விட சிங்களம் தொடர்ந்தால் தமிழர் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு கூட தயக்கம் காட்டக் கூடாது என்பதுதான் இன்றைய தேவையாக உள்ளது.

0 கருத்துக்கள் :