அகதிகளை வரவேற்ற கனடா இப்போது அகதிகளை எதிரிகளாகப் பார்க்கின்றது

13.9.12

கனடா முன்னர் இங்கு அகதிகளாக வந்த வெளிநாட்டவர்களை வரவேற்பதில் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான நாடாக விளங்கியது. உலக நாடுகள் பல, தங்கள் நாடுகளின் அகதிகள் தொடர்பான நடைமுறைகளை அமுல் செய்வதற்கு கனடாவின் வழிகளைப் பின்பற்றின. ஆனால் தற்போதை கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கமும் அதன் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னியும் கனடாவிற்கு வரும் அகதிகளை கனடாவின் எதிரிகளாகவே பார்க்கின்றார்கள்.

அதுவும் குறிப்பாக இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலிருந்த வரும் அகதிகளை சிறைகளில் அடைக்கும் சட்டங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை சட்டமாக்கவும் முயலுகின்றார்கள். இதேவேளை குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மட்டுமே கடனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அமுல் செய்வதில் அமைச்சர் ஜெய்சன் கென்னி மிகவும் கண்டிப்பாக உள்ளார்.

தனி ஒரு மனிதனான அவர் எவ்வாறு அகதிகள் தொடர்பான சட்டங்களை தனது சொந்த விருப்பத்தின் படி செய்ய முடியும் என்றே லிபரல் கட்சியினராகிய நாங்கள் கேட்கின்றோம். என நேற்று மாலை கனடாவின் ரொரென்ரொ நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் லிபரல் கட்சியின் வினிப்பெக் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் குடிவரவு தொடர்பான விவகாரங்களுக்கான பாராளுமன்ற பேச்சாளருமான கெவின் லெமொறொக்ஸ் தெரிவித்தார்.

“Defending our Immigration System” என்னும் தலைப்பில் நடைபெற்ற மேற்படி கருத்தரங்கில் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் பல்கலாசார விவகாரங்களுக்கான |பேச்சாளருமான ஜிம் கரிஜியானிஸ் மற்றும் குடிவரவு துறை சார்ந்த சட்டத்தரணி திருமதி அஞ்சலா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கெவின் தொடர்ந்து தெரிவிக்கையில், “தற்போதைய கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கம் அதன் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பரும், கனடா வரும் அகதிகளுக்கும், வெளிநாட்டிலிருந்து வரும் புதிய குடிவரவாளர்களுக்கும் பல பாதகமாக நடந்த கொள்கின்றனர். குறிப்பாக அரசாங்கத்தின் குடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னி தனது சொந்தக் கருத்துக்களின் படி செயற்பட்டு வருகின்றார். அவரது சி-31 என்னும் புதிய சட்டமானது எதிர்காலத்தில் கனடாவிற்கு வரும் அகதிகளை மிகவும் மோசமாக பாதிக்கவுள்ளது. அவரது எண்ணத்தின் படி கனடாவிற்கு வரும் அகதிகளை அவர் எதிரிகளாகவே பார்க்கின்றார். அவரைப் போலவே கனடிய மக்களும் அகதிகளை எதிரிகளாகவே பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.

அத்துடன் அகதிகள் விவகாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தின் காலத்தில் கனடாவிற்கு குடிவரவாளர்களாக வந்து மூன்று வருடங்களில் கனடிய பிரஜாவுரிமை பெற வேண்டிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடு காரணமாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயலானது குடிவரவு அமைச்சர் மீது எமக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது. இந்த நாட்டுக்கு வந்து கனடாவிற்கு விசுவாசமாக உழைத்துவரும் வெளிநாட்டவர்களை தாமதமாக குடியுரிமை பெறவைக்கும் சதி என்றே எமது கட்சி கருதுகின்றது. ஏனென்றால் முன்னைய காலத்தில் புதிய குடிவரவாளர்கள் கொன்சர்வேர்ட்டிவ் கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கவில்லை என்றார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ் தனது பேச்சின் போது பின்வருமாறு தெரிவித்துள்ளார். “கனடாவின் குயடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னியிடம் நாம் பல தடவைகள் நேரடியாவே கேட்டோம். குடிவரவு சட்டங்களில் எதாவது மாற்றங்கள் செய்யும்போது எதிர்க்கட்சியினராக எங்களிடமோ அல்லது அகதிகள் விவகாரங்கள் தொடர்பாக பணியாற்றிவரும் அமைப்புக்களிடமோ ஆலோசனைகளைப் பெற்று சட்டங்களை வரையும் படி கேட்டோம். ஆனால் “யெஸ்” என்று தலையை ஆட்டியபடி அவர் போய்விடுவார். ஆனால் அடுத்து வரும் நாட்களில் அவர் மிகவும் மோசமான சட்டங்களை அறிவித்து கனடாவிற்கு வரும் அகதிகளை பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்வார்.

அமைச்சர் ஜெய்சன் கென்னி அகதிகளை மட்டும் பாதிப்படையச் செய்யவில்லை. கனடாவில் குடியுரிமை பெற்றும் தங்கள் பிறந்த நாட்டில் உள்ள தமது தாய் தந்தையரை கனடாவிற்கு அழைப்பதிலும் கடுமையான சட்டங்களை அமுல் செய்யவுள்ளார். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது எதிர்காலத்தை பாதி;க்கும் வகையில் குடிவரவுச் சட்டங்களை அமுல் செய்யும் கொன்சர்வேட்டிவ் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும். அல்லது பதிவியிலிருந்து விலக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

பாவம் அவங்களுக்கு என்ன பிரச்சனயோ!

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)