“மறக்க முடியாத” முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஆரம்பமானது பாடசாலை

8.9.12


கடந்த காலப் போர் அழிவுகளால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு றோ.க.த.க. வித்தியாலயம், முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயம் என்பன மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறுதிப் போரின் போது இடம்பெயர்ந்து மனிக்பாம் நலன்புரி நிலையங்கள் மற்றும் வேறு பாடசாலைகளில் பல இடர்களுக்கு மத்தியில் கல்வியைக் கற்று வந்த இவ்விரு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் தமது சொந்தப் பாடசாலைகளில் ஆர்வத்துடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விரு பாடசாலைகளிலும் புதுக்குடியிருப்புக் கோட்டத்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். வரதராஜமூர்த்தி, கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

தரம் 1 தொடக்கம் 10 வரையான வகுப்புக்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிபர் எஸ்.அன்ரன் குலதாஸ் தலைமையில் 8 ஆசிரியர்கள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயம் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர் கே.மாசிலாமணி தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் முல்லை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். இராஜ்குமார், கரைதுறைப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். செகசோதிநாதன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம சேவகர் எஸ். அருணோதயம், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டு பாடசாலையை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தப் பாடசாலைக்கு 47 மாணவர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களில் சுமார் 35 மாணவர்கள் 15 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள திப்பிலி நலன்புரி நிலையத்திலிருந்து தமது சொந்தப் பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
.

0 கருத்துக்கள் :