மாவிட்டபுரத்தில் கிணற்றிலிருந்து மூடைக் கணக்கில் உணவுப் பொருட்கள் மீட்பு

23.9.12

தெல்லிப்பளை மாவிட்டபுரத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சுமார் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மூடைகளில் பருப்பு பயறு உள்ளி உழுந்து என பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுளளன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக, சிறிலங்கா இராணுவத்தினரால் உயர் பாதுகாப்ப வலயமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்தப் பகுதி கடந்தாண்டு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறி வருகின்றனர். அவ் வகையில், மாவிட்டபுரம் ஆலடி ஒழுங்கையில் உள்ள வளவு ஒன்றிலுள் கிணறைத் துப்புரவு செய்ய வீட்டார் முற்பட்ட நிலையில் கணிற்றில் இருந்து இந்தப் பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. கிணற்றின் அடியில் படங்கு கொண்டு மூடப்பட்டு இருந்த இந்தப் பொருட்களால் கிணற்றின் ஊற்றுகளும் கூட அடைக்கப்பட்டு நீர் வெளி வராத நிலையில் தடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்தப் பொருட்கள் ஆலடி வீதியோராத்தில் போடப்பட்டுள்ளமையால் துர் நாற்றம் வீசுவதினால் அந்தப் பகுதியில் மீளக் குடியேறிய மக்கள் பலத்த சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் இத்தகைய உணவுப் பொருட்கள் கிணறுகளில் முடக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்கள் இடம் மாறும் வேளை, குறிப்பிட்ட பொருட்களை கொண்டு செல்லாது கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் அல்லது திருட்டுத்தனமாக பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் எனவும் அப் பகுதி மக்களால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் மாவிட்டபுரத்தில், கந்தசாமி என்பவருடைய கிணற்றில் இருந்து இத்தகைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பிரதேச சபையின் உதவியுடன் அகற்றப்பட்டது. இவ்வாறு பல லட்சம் ரூபாக்கள்பெறுமதியான பொருட்கள் யாருக்கும் பயன்படாத முறையில் அழிக்கப்பட்டுள்ளமை பொது மக்களிடையே பலத்த விசனத்தை எற்படுத்தியுள்ளது.

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

\\"மாவிட்டபுரத்தில் கிணற்றிலிருந்து மூடைக் கணக்கில் உணவுப் பொருட்கள் மீட்பு"//

இதை போல எத்தனை பேர் வைத்து இருக்காங்களோ.......பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)