ஐ.நா முன்றலில் பொங்கு தமிழராய் அணிதிரள்வோமென சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல்

20.9.12

இனிமேலும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நிர்க்கதியாய் நிற்கும் தமிழ் இனத்திற்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஐ.நாவிடம் அறைகூவல் விடுப்பதற்காக 22.09.2012 (சனிக்கிழமை) ஐ.நா முன்றலுக்கு உலகத்தமிழ் உறவுகள் அனைவரும் உணர்வுடன் அணிதிரண்டு வரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சு நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்பாகவிருந்து கடந்த 14.09.2012 தொடக்கம் செல்வராஜா வைகுந்தன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் நிறைவடைகின்றது. உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்னும் சுதந்திர தாகம் தீரவில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கப் பெருந்திரளான தமிழர்கள் ஒன்றுகூடுவோம். எங்களை அழித்தவன், எங்கள் பாரம்பரியத்தை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை, எங்கள் தொன்மையான தமிழ்மொழியை படிப்படியாக நுட்பமாகத் திட்டமிட்டு தொடர்ந்து அழித்துவருவதோடு, எங்கள் நிலத்தையும் நிரந்தரமாக வன்கவர்ந்து வருகிறான. தமிழரின் பூர்வீக தாயக நிலத்தில் தமிழர்கள் உரிமைகூற ஏதுமற்ற நிலை உருவாகக்கூடிய ஓர் இரகசிய செயற்றிட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. எமது உறவுகளை, எமது தாய்நிலத்தை, மொழியை, தமிழரின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? "தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்" எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் பண்பாடு - உலகிலேயே மிகவும் தொன்மையானது, வீரமானது, தனித்துவமானது! ஆகவே, எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தொடர்ந்து முனைப்போடு போராடுவோம்!உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழர்கள் ஓரணியாக எழுச்சிபெற்று போராட்டங்களைச் செய்யவேண்டும். எமக்கான நீதி, கிடைக்கப்பெறும்வரை நாம் தொடர்ந்து எங்கள் உரிமைக்காக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும். இளையோர்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும். கடந்த 17.09.2012 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்கள் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து தன்னுயிரைத் தீக்கிரையாக்கி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். அவருக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சார்பில் எமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது தமிழின உணர்விற்கு சிரம் தாழ்த்தும் அதேவேளை எம்மினப் பகைவனோடு போராடுவோம், அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்களது தமிழினப் பற்றுணர்வினைப் புரிந்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓரணியாக நின்று மாபெரும் பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வை ஒரு சக்திவாய்ந்த போராட்டமாக மாற்றுவோமாக! தமிழின விடுதலைப்போருக்கும் தாயக செயற்ப்பாடுகளுக்கும் உலகத்தமிழ் உறவுகள் உணர்வுடன் வழங்கிய பேராதரவை வரலாறு என்றுமே மறந்து போகாது இந் நிலையில்; ஐ.நா சபைமுன்றலிற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் திரண்டு வருகைதர வேண்டும் என்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம். - "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

0 கருத்துக்கள் :