நிலாவரைக் கிணறும் வற்றுவதால் யாழ்.குடாநாடு எதிர்கொள்ளும் அபாயம்

13.9.12


காலநிலை மாற்றங்கள் எல்லாம் காகிதத்தில் எழுதிவிட்டாலோ கணினியில் பதிந்து விட்டாலோ மாற்றம் அடைவதில்லை. சுற்றுப்புறச் சூழலில் இடம்பெறும் புவிநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி, சூறாவளி, பனிமலைச் சரிவு, வெள்ளம், வரட்சி, இடிமின்னல் தாக்கம், காட்டுத்தீ, நிலச்சரிவு என்பன இயற்கை அனர்த்தங்கள் எனப்படுகின்றன.

இன்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது வரட்சி பற்றியதாகும். குறைந்த மழைவீழ்ச்சி, காலநிலைத் தாக்கம், சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் மானிட நடவடிக்கைகள், நச்சுக்கலவைகள் ஆகியன வரட்சியை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்துக்கின்றன.

உலகமெங்கும் அதிகரித்துவரும் மக்களின் தேவைகளால் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. இதனால் உயிரினத்தின் பல்லினத்தன்மை குன்றும், நீரியல் வட்டம் பாதிக்கப்படும், காட்டு விலங்குகளின் இறப்பும் சூழல் மாசடைவும் வெப்ப அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் எழும்.

இவற்றோடு மழை வளம் குறையும். இதன் விளைவாக பயிர்ச்செய்கை பாதிப்புறும். குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். பூமியின் அதிமுக்கியமான இயற்கை வளமாக நீர் விளங்குகின்றது. புவிக்கோளத்தில் ஏறக்குறைய 75 சதவீதப்பகுதி நீரினால் மூடப்பட்டுள்ளது.

புவியின் மேற்பரப்பு நீரை 100 சதவீதமெனக் கொண்டால் 97.2 வீதம் கடல் நீராகும். உறை நீர் 2.2 வீதமாகவும் நீராவி 0.001 வீதமாகவுள்ளது. ஆக 0.6 வீதமான நீரே திரவ நிலையிலுள்ளது. இந்த நீரையே புவியில் உள்ள சகல உயிர்களும் தம் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றன.
மரங்களை அழிப்பதனால் எத்தனை இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது. பருத்தித்துறை வல்வைவெளியில் 100 மீற்றர் தூரத்திற்கு இரு மருங்கிலும் ஏரிகள் இருந்தன. வீதி அபிவிருத்திப் பணிக்காக வீதிப் புனரமைப்புப் பணியாளர்களினால் இவ் ஏரியில் இருந்து பௌசர்கள் மூலம் நீர் எடுத்து வீதிகளுக்கு ஊற்றப்பட்டது.

வழமையாக இன்னும் ஒரு மாதம் கடந்த நிலையில் வற்றும் இந்த ஏரிகள் வீதிப் புனரமைப்புப் பணியாளர்களினால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முற்றுமுழுதாக வழித்தெடுக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் 34,300 குடும்பங்கள் குடிநீர் கூட கிடைக்காத அளவிற்கு வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பேரழிவு முகாமைத்துவம் சுட்டிக் காட்டியுள்ளது.

இன்னும் பல இடங்களில் நீரை வீண் விரையம் செய்கின்றார்கள். ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக பூநகரியில் பணம் கொடுத்தே நீரைப் பெற்றுக் கொள்கின்றார்கள். பாடசாலைகளில் மழைநீரைச் சேகரித்து வைக்கும் பழக்கத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில பாடசாலைகள் தாமாகவே முன்வந்து வரப்போகின்ற வரட்சியினைக் கருத்திற்கொண்டு மழை நீரைச் சேகரித்து வருகிறார்கள். குறிப்பாக மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் பத்தாயிரம் லீற்றர் நீரினைச் சேகரித்து இந் நீரினை ஒரு வருடத்திற்குப் போதுமானதாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
அண்மையில் யாழ். காரைநகரில் ஒரு குறித்த நபர் தமது வளவில் கிணற்றினை வெட்டினார். அக்கிணற்றிலிருந்து பெறப்பட்ட நீரை அயல் வீட்டாருக்குக் குடிக்கக் கொடுத்து எப்படி இருக்கிறது என்று கேட்டார். குடித்த நபர் “சிவன் கோயில் மோர் மாதிரி இருக்குது” என்றார்.

கிணற்றுக்காரர் அளவிட முடியாத மகிழ்ச்சியில் திளைத்து இன்னும் கொஞ்சம் வெட்டினால் தண்ணீர் மேலும் நல்லாயிருக்கும் என்று வெட்டினார். அவர்கள் குறித்த அளவு வெட்டிய பின்னர் நீரை அண்டை வீட்டாருக்குக் குடிக்கக் கொடுத்து எப்படி இருக்குது என்று கேட்டார். குடித்தவர் “பிறகென்ன சோத்துக்கு உப்புத் தேவையில்லை” என்றார்.

இப்படியாகத்தான் பலர் இருந்ததையும் இல்லாது செய்து விடுகின்றனர். இந்நிலையில் இருப்போருக்கு நீர் வளச் சேவை விழிப்புணர்வுகளையும் கருத்தமர்வுகளையும் செய்து விழிப்படையச் செய்ய வேண்டும்.

உணவின்றி வாழலாம். உடையின்றி வாழலாம். ஆனால் நீரின்றி வாழமுடியாது. இதனைக் கருத்திற் கொண்ட திருவள்ளுவர் கூட வான்சிறப்பு என்னும் அதிகாரத்தை வகுத்தார். இன்று இது பற்றிச் சிந்திக்க நேரமில்லாத மனிதர்களாக நாம் இருக்கின்றோம்.

புத்தூர் நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, ஊரெழு பொக்கணைக் கிணறு, கரவெட்டி அத்துளுக்கிணறு, பருத்தித்துறை அறுபது பாகைக் கிணறு என்பன வற்றாத கிணறுகள் என்ற அடைமொழியில் அழைக்கப்படுகின்றன. இன்றுள்ள நிலைமை போல் தொடர்ந்தும் வரட்சி நிலவி வருமானால் இக்கிணறுகளின் நிலைமைகளும் கவலைக்கிடமாகும்.


உலக நாடுகளில் மழை நீர்ப் பயன்பாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குடிப்பதற்கு வழங்கும் நீரைப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தக் கூடாதெனச் சட்டம் வகுத்துள்ளனர். வீடுகளில் மட்டுமன்றிப் பாடசாலைகள், பொது நிறுவனங்கள், ஆலயங்கள் ஆகியவற்றிலும் மழை நீரைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நீர்ப் பிரச்சினை ஓரளவுக்குத் தீர்க்கப்பட்டு வரட்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

2020 ஆம் ஆண்டளவில் 10 ஆயிரம் குளங்களின் புனர்நிர்மாணத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் விவசாய சமுதாயத்தின் பங்கேற்புடன் துரிதப்படுத்தப்படும் சுமார் 2 இலட்சம் ஏக்கருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நீர் வழங்கலை வழங்குவதோடு நடைமுறையிலுள்ள காணிகளின் பயிர்ச்செய்கை அளவையும் புதிய பயிர்ச் செய்கைக் காணிகளின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க முடியும் என்று ‘தஹஸக் மக வெவ’ நிகழ்ச்சித் திட்டம் கூறுகின்றது.

இதுவரைக்கும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எத்தனை குளங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன? என்று கேட்டால் அவற்றிற்கு கையிலே எண்ணி விடை சொல்லிவிடலாம். வெள்ளம் வருமுன் அணை கட்டவேண்டும். அந்த அணையை வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது. எங்கு வெள்ளம் வருகிறதோ அங்குதான் அந்த அணையைக் கட்டவேண்டும்.

அதேபோலவே வரட்சி வரப்போவதற்கான அறிகுறி தென்பட்டால் அவற்றிற்கான திட்டமிடலைச் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியில்லையாயின் போடப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் அத்தனையும் வீணாகிவிடும். குளம் வெட்டக் கேட்டால் குழந்தைப் பிள்ளைக்காரன் நான், குசினியில வேலையிருக்குது, குடிச்சாத்தான் வெட்டுவன், குனிய ஏலாது, குடும்பத்தில் நான் மட்டும்தான், குடிக்கவே கிணறு இல்லை பிறகு குளமோ? என்றெல்லாம் காரணங்களைக் குவித்துக் கொண்டே போவார்கள்.

அண்மையில் கூட மணற்காடு பொற்பதியில் பெருவாரியான சவுக்கு மரங்கள் விஷமிகளினால் தீயிடப்பட்டிருக்கின்றன. இந்நிலைமைகளே யாழ். குடாநாட்டின் வரட்சிக்கு அணி சேர்த்து வருகின்றன.

உலகிலேயே அதிகளவு மழையைப் பெறும் இடமாக இருந்த சீறாப்பூஞ்சியில் கூட குடிப்பதற்கு ஐந்து மாதங்கள் நீர் இல்லை. நம்புவீர்களா? ஆம். இதுதான் உண்மை இந்தியா. சத்திய கோணம் என்ற இடத்தில் ஐயாசாமி என்ற பெரியவர் தனது 52 ஆவது வயதில் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார். அவருக்கு 72 வயது ஆனபோது 3 ஆயிரம் மரக் கன்றுகளை வைத்து முடித்தார்.

ஆனால் சில மனிதர்களோ அவர் வைத்த மரங்களில் சிலவற்றை தமது தேவைக்காகக் களவாக வெட்டி எடுத்துச் சென்று விட்டார்கள். “ஒரு மரத்தை வெட்டுவதாய் இருந்தால் ஒன்பது மரத்தை நடு” என்ற உண்மைகளை இன்று மறந்து வாழும் மனிதன் வரட்சியைக் கண்டவுடன் அழிப்பு தொடர்பாகச் சிந்திப்பதில் இலாபம் எது வுமில்லை.

இன்று வரட்சி நம்மை வாட்டிக் கொண்டாலும் நாளை வரட்சி அற்று இருக்கவும் எதிர்காலச் சந்ததியினருக்காக ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து குளம் வெட்டுவதற்கான பங்களிப்பைச் செய்வோம். ஒவ்வொருவரும் ஒரு அடி ஆழம் என்ற கணக்கில் வெட்டினால் அதில் எத்தனையோ ஆயிரம் முழங்கள் வரும்.

இது வந்தால் இன்னும் ஆயிரம் ஆயிரம் குளங்கள் வரும். வரப்போகின்ற மாரி காலத்து மழை நீரைக் கடலுடன் சங்கமிக்க விடாது வற்றி வரண்டு போயுள்ள குளத்திற்குள் அந்நீரினைச் சென்றடைய வழி கோலுவோம். நீரினைச் சேகரித்து நிறைவான வாழ்வைக் காண்போம்

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)