விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்த மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்கள்

15.9.12


மொழியும் கலையும் கலாச்சாரமும் வளம்பெற்று வளர்ச்சியும் உயர் மேன்மையும் அடையும் பொழுதே மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன, தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது. இதைச் சொன்னவர் தேசியத் தலைவர் அவர்களே. விடுதலை என்ற இலட்சியத்திற்காகப் போராட்ட வாழ்வை மேற்கொண்ட இந்தப் புரட்சிகர இயக்கம் தமிழினத்தின் பன்முக பண்பாட்டு வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்தது.
இந்தமட்டில் விடுதலைப் புலிகள் உலகின் பிற விடுதலை இயக்கங்களில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்களுடைய சாதனைப் பட்டியல் மிக நீளமானது. அவர்கள் நிகழ்த்திய சமூக மாற்றங்கள் நிரந்தரமானவை, வேற்று நாட்டு விடுதலை அமைப்புகளுக்கு முன்மாதிரியானவை.

எமது மொழியும் கலையும் பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதரமாக நிற்பவை. இதை தமிழீழ விடுதலைப் போரின் ஆதார சுருதியாகக் கொள்ள முடியும். விடுதலைப் போரின் முக்கிய அங்கமாக மொழி வளர்ச்சியையும் கலை பண்பாட்டு மறுமலர்ச்சியையும் விடுதலைப் புலிகள் கொண்டுள்ளனர்.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைவாக கலை, இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களை சிருட்டிக்க வேண்டும் என்று தேசியதலைவர் விரும்பினார்கள், அதற்கான உந்துதலையும் கொடுத்தார்கள்.

மனிதனை மனிதனாகப் பார்க்கும்படியும் மனித இயல்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும்படியும் நவீன இலக்கியங்கள் கூறுகின்றன. அரைத்த மாவை அரைக்காமல் புதுமைக் கண்ணோட்டத்தில் படைப்புக்களைத் தயாரிக்கும்படி அது அறை கூவல் விடுக்கின்றது. பாமரனும் இலக்கியம் படைக்கலாம் என்ற அனுமதியை அது வழங்குகிறது.

மொழி அடையாளத்தைப் பேணுவதில் மிகப் பரந்தளவு நடைமுறையைப் விடுதலைப் புலிகள் நிர்வாக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னெடுத்தார்கள். கணினி ஆங்கிலத்திற்கு கணினித் தமிழ் ஈடுகொடுக்க முடியாமற் போனதற்கு உலகத் தமிழர்களின் அக்கறை இன்மையே காரணம்.

மொழி அடையாளத்தைப் பேணுவதில் காட்டாத ஆர்வத்தை ஆங்கிலத்திற்கு தமிழர்கள் காட்டுகின்றனர் என்பது சமூகவியலாளர்களின் முடிவு. ஆனால் தூய தமிழ் பயன்பாடும் பேணுகையும் விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியங்களில் முதன்மையானவை. ஆங்கிலம் வடமொழி போன்ற பிறமொழிகள் தமிழில் கலப்பதை அவர்கள் தடுத்தனர். இப்படியான கலப்பு நாளடைவில் தமிழின் இருப்பை அழித்து விடும் என்பது மொழியியல் வரலாறு.

ஸ் தொடக்கம் ஹ வரையான ஜந்து கிரந்த எழுத்துக்களின் பயன்பாட்டை நிறுத்தும் முயற்சியை புலிகள் மேற்கொண்டனர். தமிழ் நெடுங்கணக்கில் இந்த எழுத்துக்கள் இணைவதை அவர்கள் தடுத்துள்ளனர். திருக்குறளில் காணப்படாத ‘ஒள’ என்ற எழுத்தின் பயன்பாட்டை இயன்றளவு நிறுத்தினார்கள். கிரந்த எழுத்துக்களின் நீடிப்பும் தேவையும் குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர் சூட்டுவதால் எழுந்தது.

தமிழீழத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவதற்கு உதவியாகப் தமிழ்ப் பெயர்கள் அடங்கிய பெருநூலை புலிகள் வெளியிட்டார்கள். தமிழ்ப் பெயர் சூட்டும் பெற்றோருக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கியதோடு குழந்தையின் பெயரில் தமிழீழ வைப்பகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறந்து கணிசமான தொகையை வைப்பில் இட்டனர்.

ஆனால் ஆங்கிலக் கல்விக்குரிய அங்கீகாரத்தை அவர்கள் வழங்கத் தவறியதில்லை. தமிங்கிலம் உருவாவதைத் தடுத்தார்களே ஒழிய ஆங்கிலத்தை தனிப் பெரும் உலக மொழி என்ற அடிப்படையில் ஊக்குவித்தார்கள். “அறிவு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் எனது இனமும் எனது மக்களும் வளர வேண்டுமென்று நான் அதிகம் விரும்புகிறேன்.” என்று தேசியத் தலைவர் தமிழீழத்தின் கல்வித் திட்டம் தொடர்பான கருத்தரங்கில் சொன்னார்.

நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவியலுக்காக விசேட கல்விச்சாலைகளைத் திறந்து கணினிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த வரலாற்றுச் சிறப்பு புலிகள் நிர்வாகத்திற்கு உண்டு. முழுக்க முழுக்க இணையத் தமிழ் வழியிலேயே தங்களிடையேயும் உலகத் தமிழரோடும் தொடர்புகளை வைத்திருந்த விடுதலைப் புலிகளின் தமிழ்ப் பங்களிப்பு அளப்பரியது.

இன்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கணினித் தமிழ் பயன்பாட்டில் உலகத் தமிழர்களுக்கு அவர்களே வழிகாட்டிகளும் முன்னோடிகளுமாவர். மிகச் சுருக்கமாகக் கூறுவதாயின் விடுதலைப் புலிகள் தான் கணினித் தமிழ்ப் பயன்பாட்டைத் தொடக்கி முன்னெடுப்பவர்கள்.

அம்மியே கைலாசம் அடுப்படியே வைகுந்தம் என்று கிடந்த பெண் சமூகத்தில் ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் பெண் போராளிகள் தமது வீரச் சாதனைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

“விடுதலைப் புலிகளின் மகளிர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று” இது தேசியத் தலைவர் அவர்கள் பெருமிதத்துடன் கூறிய சொற்கள். தீண்டாமையை ஒழித்ததோடு பெண் விடுதலைக்கு வித்திட்ட அருஞ் சாதனைக்குரிய விடுதலைப் புலிகளைச் சமூகப் புரட்சியாளர்களாகக் கருத வேண்டும்.

முத்தமிழில் இரு வகையான இசையையும் நாடகத்தையும் மேம்படுத்திய சிறப்பு புலிகள் இயக்கத்திற்கு உண்டு. தமிழர்கள் பிழைப்புத் தேடிப் பிற நாடுகளுக்குச் சென்ற போதும் பிற நெருக்குதல்களால் புலம்பெயர்ந்த போதும் தமது கலைகளை எடுத்துச் சென்றனர்.

தமிழீழத்தில் விடிய விடியக் கூத்துக் கட்டி ஆடிய நெடிய வரலாறு உண்டு. முத்தமிழில் மூன்றாவதாக விளங்கும் நாடகம் தமிழர் நாகரிகத்தின் மிகப் பழமையான இலக்கிய வடிவம். தமிழர்களிடமிருந்து சிங்கள தேசத்தின் நாடகப் பாரம்பரியம் பெறப்பட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடகக் கலையை “நாடகம” என்று அழைக்கிறார்கள்.

தமிழின் தலையாய காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாடகத்தின் தன்மைகளும் கூறுகளும் கூறப்பட்டுள்ளன. மேடை அமைப்புமுறை பற்றியும் கணக்கிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. மேடைத் திரைச் சீலைகள் மூன்று வகைப்படும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. ஒரு முக எழினி, கரந்து வரல் எழினி, பொரு முக எழினி என்பன அவையாகும்.

புலிகளின் குரல் பண்பலை வானொலி நடத்திய ஆய்வுப் பட்டறையில் பழந் தமிழர் நாடகக் கலை, தெருக்கூத்து, வில்லுப் பாட்டு, கிராமியக் கலைகள் பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. போராட்டத்திற்கு உந்து சக்தியாகத் திகழும் எழுச்சிப் பாடல்களை ஒலி பரப்பியதோடு சிறு கதை இலக்கியம், கவிதை, பழைய இசைக் கருவிகள் பற்றிய ஆய்வுகளையும் அது ஒலிபரப்பியது.

தமிழ்க்கவி என்ற பெண் போராளி கிராமம் கிராமமாகச் சென்று நாட்டார் பாடல்களைச் சேகரித்தார். கிராமந்தோறும் இலை மறை காயாக வாழும் கிராமியக் கலைஞர்களை வாய் மொழியாகவும் பாட்டாகவும் அவர் புலிகளின் குரல் வானொலி ஊடாக அறிமுகஞ் செய்தார்.

சுத்த மத்தளம், பறை, தாரை, தப்பட்டை, சேமக்கலம,; உடுக்கு, பேரிகை போன்ற இசைக் கருவிகளும் அவை வெளிப்படுத்திய இசை வடிவங்களும் மறைந்து வரும் நிலையில் அவை பற்றிய நினைவு கூரலை அரங்கப்படுத்திய சிறப்பு புலிகளின் குரல் வானொலிக்கு உண்டு.

ஈழத் தமிழர் கூத்துக்கள் இரு வகைப்படுகின்றன. வடமொடி, தென்மோடி என்ற இரு வகையும் கிட்டத்தட்ட மறைந்து விட்டன. நவீன நாடகக் கலையும் திரைப்படமும் தொலைக்காட்சியும் இந்த மறைவுக்குக் காரணமாகி விட்டன. புதைபடிவ ஆய்வு போல் அவை பற்றிய ஆய்வை புலிகள் நிhவாகக் கட்டமைப்பின் அங்கமான கலை, பண்பாட்டு கழகம் மேற்கொண்டது.

போரட்ட அமைப்பானாலும் நடைமுறை அரசாக அமைந்த விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்காக ஒரு கழகத்தை நிர்வகித்தனர். வெளிச்சம் என்ற இலக்கிய சஞ்சிகையை பிரசுரித்த இந்தக் கழகம் சங்க இலக்கியம் தொட்டு நவீன இலக்கியம் தொடர்பான பரந்தளவு பார்வையை மேற்கொண்டது.

கலை, பண்பாட்டுக் கழகத் தலைவர் புதுவை இரத்தினதுரை கவிஞரும் ஆய்வாளருமாவார். தமிழ் நாட்டில் இருந்து நாதஸ்வர இசைக் கருவி தமிழீழம் வருவது தடைபட்டபோது பாராம்பரிய ஆசாரியான அவர் உள்ளுரில் கிடைத்த இயற்கை வளங்களைப் பயன்படுத்தித் தரமான பாரி நாதஸ்வரத்தை உருவாக்கினார். தமிழீழத்தின் தேசிய மங்கல வாத்தியம் நாதஸ்வரமாகும்.

நவீன எலத்திரனியல் இசைக் கருவிகளான டிரம்ஸ், கீபோர்டு, ஆர்கன் என்பன தமிழீழத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை புலிகள் அனுமதித்தார்கள். பான்டு வாத்தியத்திற்கு ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர் வாயிலாகப் புலிகள் தங்கள் அமைப்பில் இடமளித்தார்கள். முக்கிய நிகழ்ச்சிகளின் போது இறக்குமதி செய்யப்பட்ட இசைக்கருவிகளுடன் பான்டு வாத்தியம் இசைக்கப்பட்டது.

தமிழீழத்தின் நாட்டுக் கூத்துக்களிலும் பழைய இசைக் கச்சேரிகளிலும் ஆர்மோனியம் என்ற இசைக் கருவி வாய்ப் பாட்டிற்குத் துணையாக வாசிக்கப்பட்டது. இன்று ஐந்து கட்டை, எட்டுக் கட்டை என்று குறிப்பிடப்படும் ஒலி அளவீடுகள் ஆர்மோனியத்தில் இருந்து வந்தவை தான். ஏழு ஸ்வரங்களும் இந்த பெட்டிக்குள் இருந்து வெளிவந்தன.

கீபோர்டின் வருகையால் ஆர்மோனியம் பழைய கதையாகி விட்டது. புலிகளின் குரல் வானொலி; அரசியல் துறையின் கீழ் செயற்பட்டது. ஆர்மோனியம் இசைக் கருவி பற்றிய ஆய்வை மேற்கொண்ட வானொலி மெட்ராஸ் மெயில் என்ற ஆப+ர்வ இயற் பெயர் கொண்ட கலைஞர் ஊடாக இந்த இசையை ஒலி பரப்பியது.

அரசியல் பிரிவின் கீழ் திரைப்படப் பிரிவும் இயங்கியது. உலக தரம் வாய்ந்த குறும் படங்கள், திரைப்படங்களை நிதர்சனம் திரைப்படப் பிரிவு தயாரித்தது. 2008ம் ஆண்டு உயிரம்பு என்ற முழு நீளப் படத்தை மன்னாரைச் சேர்ந்த அன்பரசு என்ற போராளிக் கலைஞரின் இயக்கத்தில் அது திரையிட்டது. இது தான் புலிகளின் திரைப்படப் பிரிவு வெளியிட்ட இறுதியான திரைப்படம்.

0 கருத்துக்கள் :