பிரபாகரனின் இடைவெளியை எவராலும் நிரப்ப முடியாது - கேணல் ஹரிகரன்

26.9.12

தமிழர் விவகாரமானது அண்மையில் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளாத சிறிலங்கா அரசாங்கத்தை புறக்கணிக்குமாறு பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், இவ்வாறான நடவடிக்கைகள் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அதிபர் ஒருவரால் ஆளப்படும் சிறிலங்கா தீவுடனான இந்தியாவின் வெளியுறவில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக oneindia ஊடகம் ஓய்வுபெற்ற இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரனுடன் தொடர்பு கொண்டு செவ்வி கண்டது. கேணல் ஆர்.ஹரிகரன் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளாக இராணுவப் புலனாய்வு சிறப்பு அதிகாரியாக பங்களாதேஸ், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளில் பணியாற்றிய அதேவேளையில், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகள் போன்றவற்றை முறியடிப்பதிலும் பங்காற்றியுள்ளார். 1965ல் குச் என்ற இடத்தில் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், 1971ல் தற்போதைய பங்களாதேசான கிழக்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கை, வடக்கு கிழக்கு மாநிலங்கள், பங்களாதேஸ் மற்றும் சிறிலங்கா ஆகியவற்றில் கிளர்ச்சிமுறியடிப்பு நடவடிக்கைகளிலும் கேணல் ஆர்.ஹரிகரன் பங்கெடுத்துள்ளார். 1987-90 காலப்பகுதியில் சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்கான தலைமைப் பொறுப்பை வகித்திருந்த கேணல் ஆர். ஹரிகரனுக்கு Visisht Sewa Medal (VSM) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. அத்துடன் கேணல் ஹரிகரன் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தேசிய, அனைத்துலக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களிலும் தனது கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுதிவருகிறார். இவர் தற்போது சீனக் கற்கைகளுக்கான சென்னை நிலையம் மற்றும் டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும் தென்னாசிய ஆய்வாளர் குழு போன்றவற்றிலும் பணியாற்றுகிறார். கேணல் ஆர்.ஹரிகரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் முழுவடிவம் வருமாறு: கேள்வி: தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்கள், கொடுமைகளை எதிர்த்து இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதை நாம் பார்க்கின்றோம். இதேபோன்று சிறிலங்காவிலிருந்து வருகை தந்திருந்த உதைபந்தாட்டக் குழு மற்றும் யாத்திரிகர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றியதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டைக் காண்பித்துள்ளார். சில நடவடிக்கைகளில் சிறிலங்காவைப் புறக்கணிக்குமாறும் தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இனஉணர்வுகள் என்பதற்கப்பால் இந்தோ - சிறிலங்கா உறவுகள் என்பது சாதாரணமானதன்று. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் கேந்திர முக்கியத்துவமும் காணப்படுகின்றது. இன தேசியவாதம் என்ற பெயரில் ஜெயலலிதா போன்ற இந்தியத் தலைவர்களால் மேற்கொள்ளப்படும் 'கவசமானது' உண்மையில் சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் தற்போது சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சியில் பங்கெடுக்காது, முரண்பாட்டைத் தோற்றுவிப்பதில் ஈடுபட்டால், இந்திய உணர்வுகளை எதிர்த்து சிறிலங்கர்கள் தமது நாட்டில் எதிர்ப்புக்களை மேற்கொள்ளலாம். இவ்வாறான 'வலிந்து திணிக்கப்படும் இராஜதந்திரம்' (coercive diplomacy) என்பது இந்தியாவிற்கு நலன் பயக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா? இது தொடர்பான தங்களது கருத்து என்ன? பதில்: நீங்கள் தற்போது நான்கு வேறுபட்ட, ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வினாக்களை வினவியுள்ளீர்கள். 'வலிந்து திணிக்கப்படும் இராஜதந்திரம்' உள்ளடங்கலாக தமிழர் விவகாரம் தொடர்புபட்ட எனது கருத்துக்களை இங்கு தருகிறேன். முதலாவதாக, சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் அதனை எதிர்க்கும் குறியீடாகவே உதைபந்தாட்ட அணி மற்றும் யாத்திரிகர்களை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பியதாக தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு வரும் சிறிலங்கா யாத்திரிகர்கள் மற்றும் ஏனையோர் வரவேற்கப்படுவதாகவும், சிறிலங்காவிலிருந்து சென்னைக்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருவதாகவும் ஜெயலிலதா அறிவித்திருந்தார். இரண்டாவதாக, சிறிலங்காவுடனான இந்திய வர்த்தக உறவானது உயர்ந்தளவில் காணப்பட்ட போதே முதலமைச்சர் ஜெயலலிதா சிறிலங்காவுடனான வர்த்தக உறவைப் புறக்கணிக்குமாறு அறிவித்திருந்தார். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கையானது தற்போது கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. இவ்வர்த்தக நடவடிக்கையில் தமிழ்நாடே அதிக பங்களிக்கின்றது. பூகோள பொருளாதார, வர்த்தக நகர்வுகளைக் கருத்திலெடுக்கும் போது, சிறிலங்காவுடனான வர்த்தக உறவை முறிப்பதென்பது புத்தசாலித்தனமான செயலல்ல. சிறிலங்கா தமிழர் விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அரசியல் போட்டியாளரான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.கருணாநிதியை விட தான் அதிகம் அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிப்பதற்காகவே இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். உண்மையில் இது அரசியல் நோக்கைக் கொண்டதாகும். ஆனால் நிச்சயமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் சிறிலங்காவில் வாழும் தமிழர் விவகாரத்தில் இதயசுத்தியுடன் செயற்படுகிறார் என்பது நிச்சயமானதாகும். மூன்றாவதாக, நீங்கள் இங்கே குறிப்பிட்ட 'இனத் தேசியவாதம்' என்பது தொடர்பில் புதுடில்லியானது தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை கவனத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவு இதில் தங்கியுள்ளது. சிறிலங்காத் தமிழர் விவகாரம் தொடர்பில் மத்திய அரசாங்கமானது தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்துவதானது இவர் இந்திய தேசிய விவகாரத்தில் தலையீடு செய்வதை உறுதிப்படுத்துகின்றது. மம்தா பனர்ஜி மற்றும் முலாயம்சிங் போன்ற முதலமைச்சர்களும் இதனையே செய்கின்றார்கள். இம் மாநில முதல்வர்கள் வன்முறைப் போக்கின் மூலம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்பது பயனற்ற ஒன்றாகும். கொள்கை வகுப்புக்களை மேற்கொண்டு அதன் மூலம் மாநிலப் பிரச்சினைகளை மத்திய அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்வதன் மூலம் தீர்வு காணமுடியும். வரும் ஆண்டுகளில் மத்தியில் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய தேவை எழும்போது இவ்வாறான பல்வேறு கோரிக்கைகளை மாநில முதல்வர்கள் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியும். நான்காவதாக, வலிந்து திணிக்கப்படும் இராஜதந்திரம் என்பது முடிவடைந்து விட்டது. அமெரிக்காவால் சிரியா ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுள்ளது. இந்நிலையில் இந்தியாவானது சிறிலங்கா தனது விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டும் என பலவந்தப்படுத்த முடியாது என்பது தெளிவாகும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு, கூட்டுறவு மற்றும் அக்கறை போன்றவற்றை வழங்கி அனைத்துலக உறவுகளில் நல்லதொரு பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளமுடியும். சிறிலங்காவின் அனைத்துலக நிலை, பொருளாதாரம், கலாசாரம், மதம் மற்றும் மூலோபாயக் கொள்கைகளை மாற்றம் செய்வதில் இந்தியா ஏற்கனவே பெரும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. சிறிலங்கா போன்ற பெருமை பிடித்த நாடுகளின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இவ்வாறான 'வலிந்து திணிக்கும்' கோட்பாட்டை இந்தியா தொடர்ந்தும் கைக்கொண்டால், நாங்கள் மட்டுமே சிறிலங்காவை அந்நியப்படுத்த முடியும். இது தவிர இதன் மூலம் வேறெதுவும் நடைபெறாது. கேள்வி: மூலோபாய முக்கியத்துவம் தொடர்பில் சிறிலங்கா மீது சீனா மிகப் பெரியளவில் ஆர்வம் காட்டிவருகிறது. நேபாளம், பங்களாதேஸ், சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளுடன் சீனா நெருக்கம் காட்டுவதன் மூலம் தென்னாசியாவில் இந்தியாவை ஓரங்கட்டும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். சீனா, சிறிலங்காவுடன் நீண்டகால உறுதியான நல்லுறவை உண்மையில் கட்டியெழுப்புமாயின், இந்திய மத்திய அரசாங்கம் தனக்கு தெற்கின் மிக நெருங்கிய அயல்நாடான சிறிலங்காவுடனான வரலாற்று ரீதியான தொடர்புகளை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதன் காரணமாக இந்துமா கடல் இந்தியாவுக்கு தலைவலியைக் கொடுக்கும் ஒன்றாக மாறுமா? இந்துமா கடற்பிராந்தியத்தின் அதிகாரம் சீனாவின் கைகளில் மாறுவதை அமெரிக்கா அனுமதிக்கமாட்டது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்துலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் சமநிலையைப் பேணுவதில் இந்தியா பங்களிப்புச் செய்யவேண்டிய தேவையிருக்காதா? பதில்: 'அனைத்துலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் இந்தியா 'சமநிலையாராக' செயற்படுமா?' என்ற தங்களது வினாவின் கருத்தை என்னால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. சிறிலங்காவுடன் சீனா நீண்டகால நிலையான உறவைக் கட்டியெழுப்ப முற்படும்போது இதனைத் தடுப்பதற்காக இந்தியா தனது அனைத்துலக பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தங்களது வினாவின் கருத்து என நான் ஊகிக்கிறேன். நீங்கள் இங்கே குறிப்பிட்ட எந்த நாடுகளுடனும் சீனா நீண்டகால அல்லது குறுகிய கால உறவைக் கட்டியெழுப்பவில்லை. இவ்வாறானதொரு உறவை சீனாவுடன் கொண்டுள்ள ஒரேயொரு தென்னாசிய நாடு பாகிஸ்தான் ஆகும். தென்னாசியாவில் சீனாவின் நுழைவு தொடர்பாக நாம் நோக்கும் போது, நாம் சில விடயங்களை அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். அதாவது பூகோள பொருளாதார அதிகார சக்தியாக சீனா மாறியுள்ளது. சீனாவின் பூகோள நலன்களை பாதுகாப்பதற்காக அதன் மக்கள் விடுதலை இராணுவம் நவீனமயப்படுத்தப்படுகிறது. இது பூகோள உற்பத்தி மையமாக மாறிவிட்டது. உலகில் வளங்களை அதிகம் பயன்படுத்துகின்ற மிகப் பெரிய நுகர்வோனாக சீனா மாறிவிட்டது. ஆனால் சீன நாடு தனது மூலோபாய இலக்குகளை அடைவதற்காக தனது பொருளாதார, இராணுவ வளங்களைப் பயன்படுத்துவதில் ஒருபோதும் தயக்கம் காண்பிக்காது. பூகோள பொருளாதார சரிவானது சீனாவின் வளர்ச்சி வீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தென்னாசிய சந்தைகள் மற்றும் இயற்கை வளங்களின் பக்கம் சீனா தனது பார்வையைப் பதித்துள்ளது. தென்னாசியாவில், இந்தியா அதிகாரம் மிக்க சக்தியாகவும், புவிசார், வரலாற்று ரீதியான, கலாசார முக்கியத்துவத்தைக் கொண்ட நாடாகவும் தென்னாசியாவில் மிளிர்கின்றதை சீனா நன்கறியும். சீனா, தென்னாசியாவில் செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்பை இந்தியா மிக இலகுவில் விடமாட்டாது என்பதும் சீனாவுக்குத் தெரியும். இந்நிலையில் தென்னாசியாவில் சீனா நுழைவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியா தன்னை மேலும் ஈடுபடுத்தும். சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு தேசங்களும் பலம்பொருந்திய நாடுகளாகும். இவ்விரு நாடுகளும் ஒருவரையொருவர் தட்டிவிழுத்துவதற்காக பொருளாதார மற்றும் மூலோபாய சக்திகளைப் பயன்படுத்தலாம். சீனா, இந்தியாவின் அதிகாரத்தை இலகுவில் தட்டிப் பறிக்க முடியாது, அதேபோன்று தென்னாசியாவில் சீனா காலூன்றுவதை இந்தியாவால் நிறுத்த முடியாது. இந்தியாவின் முதலாவது வர்த்தகப் பங்காளியாக சீனா மாறிவருவதை நாம் அவதானிக்க வேண்டும். இது இவ்விரு நாடுகளின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். சீனா இந்தியாவின் வர்த்தகப் பங்காளியாக இருக்கும் அதேவேளையில், சீனாவுடனான உறவைப் புறக்கணிக்குமாறு நாம் எவ்வாறு எமது அயல்நாட்டைக் கேட்க முடியும்? இது உண்மைக்குப் புறம்பானதாகும். இந்துமா கடலில் இந்திய இராணுவம் ஆதிக்கம் செலுத்துவதாக அண்மையில் சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் Liang Guanglei சுட்டிக்காட்டியிருந்தார். இந்துமா கடலில் சீனா தனது கடற்படைப் பலத்தை பிரயோகிப்பதற்கு கால அவகாசம் எடுக்கும் என்பதை அறிந்து கொள்ளமுடியும். இது தவிர்க்க முடியாதது. இந்து மாக்கடலில் சீனா தனது அதிகாரத்தை நிலைநாட்டும் என்பதை எதிர்பார்த்தவாறு அதனை உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் எதிர்கொள்வதற்கான பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கைக்கொள்ள வேண்டும். கேள்வி: தமிழ் மக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் மீளிணக்கப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்களுக்கு அப்பால், சிறிலங்கா ஒரு சுதந்திரம் பெற்ற நாடாக உள்ளது. ஏற்கனவே 1980களின் பிற்பகுதி, 1990களின் முற்பகுதிகளில் இந்தியாவானது சிறிலங்கா விவகாரத்தில் தலையீடு செய்து பெரும் விலையைக் கொடுத்திருந்தது. அனைத்துலக ஆதரவுடன் ராஜபக்ச மீது அழுத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சியை மட்டும் இந்தியா செய்ய முடியும். இந்நிலையில் இந்தியா சிறிலங்கா விடயத்தில் முரண்பட்டுக் கொள்வதன் மூலம் ஏற்கனவே விரிசலடைந்துள்ள உறவு மேலும் சிக்கலாகுமா? பதில்: இதற்கான பதில் நீங்கள் கேட்ட கேள்வியில் உள்ளடங்கியுள்ளது. இந்தியா அல்லது அமெரிக்கா மட்டுமல்ல எந்தவொரு தேசமும் தமிழ் சிறுபான்மை மக்களுக்கான மீளிணக்கப்பாட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம். தமிழ் மக்கள் சிறிலங்காவின் தேசிய மக்கள். 1987 இருந்த நிலையை விட தற்போதைய நிலைப்பாடானது மூலோபாய ரீதியில் வேறுபட்டது. கடந்த காலங்களில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்காக இந்தியாவால் வழங்கப்பட்ட அதேவிதமான அழுத்தம் வழங்கப்பட முடியாது. இந்தியாவின் கடந்த கால முயற்சியானது சிறிலங்காவுடன் 1987ல் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் விளைவாகும். தன்னாட்சிக்கான குறிப்பிட்டளவு அதிகாரத்தைக் கொண்ட மாகாண சபைகளை உருவாக்குவதற்கான உடன்பாடு இந்திய -சிறிலங்கா உடன்பாட்டின் மூலம் எட்டப்பட்டது. இது சிறிலங்கா அரசியல் யாப்பில் 13ம் திருத்தச் சட்டத்தால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசியற் காரணங்களால் மாகாணசபைகளுக்கு முழுஅளவிலான அதிகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை. ஈழப் போர் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர், அதிபர் ராஜபக்ச தனது நாட்டில் சவால் மிக்க தலைவராக உருவெடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தற்போது இல்லை. ராஜபக்ச தனது சொந்த வேகத்திற்கு ஏற்ப மீளிணக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தமிழ் மக்களின் ஆதரவை அந்நியப்படுத்துவது மட்டுமன்றி, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து சிறிலங்கா அழுத்தங்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்குகிறது. எவ்வாறெனினும், தான் ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில், தமிழர் விவகாரம் தொடர்பில் தன் மீது மேற்கொள்ளப்படும் வெளியுலகின் அழுத்தங்களுக்குப் பணியாது அதிகாரத்தைச் செலுத்தலாம் என ராஜபக்ச கருதுகிறார். இதனால் இவர் தனது நேரத்தை இழுத்தடிக்கிறார். ராஜபக்ச தமிழர் விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா பொருளாதார மற்றும் இராஜீக அழுத்தங்களை மட்டும் பிரயோகிக்க முடியும். கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு, நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட அதிபர் ஆட்சியிலிருக்கும் இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமாகுமா? இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் மேற்குலகம் போன்றன புலிகள் அமைப்பின் அழிவின் பின்னர் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக உரத்துக் குரல் கொடுக்கின்றன. இந்நிலையில் சிறிலங்காவில் மிகப் பலமான எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படா விட்டால், தமிழ் மக்கள் கௌரவமான வாழ்வைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்குமா? இன்னமும் பாலஸ்தீனியப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இதேபோன்று சிறிலங்காவில் வாழும் தமிழர் பிரச்சினைக்கும் முடிவு எட்டப்படாதா? பதில்: இதற்கான பதில் நீங்கள் கேட்ட கேள்வியில் உள்ளடங்கியுள்ளது. பிரபாகரன் எதேச்சாதிகார தலைமைத்துவப் பண்பைக் கொண்ட ஒரு தலைவராவார். இந்நிலையில் இவரால் தலைமை தாங்கப்பட்ட புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் இந்த இடைவெளியை ஜனநாயக வழி வந்த தலைவர்களால் நிரப்ப முடியாது. இந்தியாவிலுள்ள அரசியற் தலைவர்களாலோ அல்லது வேறெந்த உலகில் செயற்படும் அரசியற் தலைவர்களாலோ நிரப்பப்பட முடியாத ஒரு இடைவெளியாகவே இது காணப்படுகிறது. ஏனெனில் இவர்கள் சிறிலங்கர்களுக்கு பொறுப்பளிக்கும் தகைமையைக் கொண்டிருக்கவில்லை. சிறிலங்காவில் உள்ள தமிழ்த் தலைவர்கள் அனுபவமும் தகைமையும் கொண்டவர்கள். இவர்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமது எதிர்ப்புக்களை பலமாக முன்வைக்கின்றனர். இந்திய ஊடகங்கள் இத்தமிழ் தலைவர்களின் எதிர்ப்புக்களை முக்கியத்துவப்படுத்தி செய்திகளை வெளியிடுவது அரிதாகக் காணப்படுகிறது. அல்லது தமிழ்நாட்டு விடயங்களை முக்கியத்துவப்படுத்தி குழப்பங்களை விளைவிக்கும் செய்திகளை வெளியிடுவதை தமது முக்கிய நோக்காகக் கொண்டுள்ளார்கள். தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டதாலும், அவர்கள் இன்னமும் இயல்பு வாழ்வுக்குத் திரும்பாததாலும் சிறிலங்காவில் செயற்படும் தமிழ்த் தலைவர்கள் மீது இவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதாக உணர்கின்ற நிலையை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் ஏற்படுத்தவில்லை. அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது மனவுறுதியில் நம்பிக்கை கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் இந்த அரசாங்கம் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும். கேள்வி: ஜனநாயக வழியிலிருந்து விலகிச் செல்கின்ற தனது அயல்நாடுகள் தொடர்பில் இந்தியா 'சகிப்புத் தன்மைக் கொள்கையை' கடைப்பிடித்து வந்துள்ளதை நாம் சில சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளோம். நேபாளம், பூட்டான் போன்ற முடியாட்சி நடைபெறும் நாடுகள், இராணுவ அடக்குமுறை நிலவும் பாகிஸ்தான், எதேச்சதிகார ஆட்சி நடத்தும் மாலைதீவு மற்றும் இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மார் போன்றன தொடர்பில் இந்தியா எந்தவொரு தலையீடுகளையும் மேற்கொள்ளாது மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது. ஏனெனில் இந்த நாடுகளில் ஆட்சியில் ஏற்படும் மாற்றமானது தனது வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தைச் செலுத்தாது என இந்தியா எண்ணுகிறது. இதேபோன்று நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ராஜபக்சவால் ஆளப்படும் சிறிலங்காவிலும் இந்தியா 'சகிப்புத் தன்மையை' கடைப்பிடிக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா? பதில்: நீங்கள் குறிப்பிட்ட நாடுகளைப் போலல்லாது சிறிலங்கா தேர்தல் மூலம் தனது ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யும் நாடாகும். இத்தேர்தலில் சிறுபான்மைத் தமிழ் மக்களும் வாக்களிக்கிறார்கள். ஆகவே சிறிலங்கா என்பது இராணுவ ஆட்சியைக் கொண்ட நாடோ அன்றி முடியாட்சி நிலவும் நாடோ அல்ல. பொது மக்களின் வாக்குகள் மூலம் ராஜபக்ச இரு தடவைகள் நிறைவேற்று அதிபராக பதவியேற்றுள்ளார். நிறைவேற்று அதிகாரம் முழுவதும் பிரதமரின் கைகளிலிருக்க, பெயரளவில் மட்டும் நாட்டின் தலைவராக உள்ள இந்திய அதிபர் போன்றல்லாது சிறிலங்கா அதிபர் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட நாட்டின் தலைவராகக் காணப்படுகிறார். அதிபராக உள்ள ராஜபக்ச தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பின்னிற்கவில்லை. இது இயற்கையில் அதன் பிரதிபலிப்பை வெளிப்படுத்துகிறது. பெரும்பான்மை சிறிலங்கர்கள் மீது நம்பிக்கை கொண்ட ராஜபக்ச தான் விரும்பியபடி ஆட்சி செய்கின்றாரே தவிர, இதற்காக இந்தியா 'சகிப்புத் தன்மைக் கொள்கையைக்' கடைப்பிடிக்கின்றது எனக் கூறமுடியாது. இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 'சகோதரத்துவமானது' எனவும், சிறிலங்காவின் நலன்களுக்கு முக்கியமானது எனவும் ராஜபக்ச கருதுகிறார். பாரிய பிரச்சினைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் ஆலோசித்து வந்துள்ளார். அத்துடன் இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்காக கடுமையாக உழைத்துள்ளார். சிறிலங்காவின் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு ராஜபக்ச செயற்படுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர் தனது மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறெனினும், ராஜபக்சவின் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதற்கு நாம் எமது செல்வாக்கைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். கேள்வி: கொலனித்துவத்தின் பின்னர் சிறிலங்காவில் நிலவும் பெரும்பான்மை – சிறுபான்மை மக்களுக்கிடையிலான பிரச்சினைக்கு இராணுவ சக்தி என்பது தீர்வாக அமையும் என நீங்கள் கருதுகிறீர்களா? அரசியல் வழிமுறையின் ஊடாக இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதில் வெற்றி கொண்ட மேற்குலகல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இராணுவ வெற்றியைப் பெற்றுக் கொண்ட சிறிலங்காவும் தனது நாட்டில் மீளிணக்கப்பாடு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இது ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும் வெற்றியாக அமையுமா? பதில்: கொலனித்துவத்தின் பின் சுதந்திரம் பெற்ற நாடுகளில் மட்டுல்லாது, மேற்குலக நாடுகளிலும் கூட பெரும்பான்மை – சிறுபான்மை பிரச்சினை நிலவுகிறது. பெல்ஜியம் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இது மிகச் சிறிய நாடாகும். ஆனால் இங்கே வாழும் பிரெஞ்சு மற்றும் பிளமிஸ் மொழிகள் பேசும் மக்களுக்கிடையில் மோதல் நிலவுகிறது. இந்தியா தனது நாட்டில் உள்ள இவ்வாறான பிரச்சினைகளை அரசியல் வழி மூலம் தீர்வு காண முற்பட்ட போதிலும் இதில் முழு அளவில் வெற்றி பெறவில்லை. போடோஸ், நாகர்கள், மெயிற்றீஸ் போன்ற இனத்தவர்கள் ஆயுத வழியைப் பின்பற்றினர். மீளிணக்கப்பாட்டுடன் இணைந்து அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டிய தேவையுள்ளதை இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் மட்டுமல்லாது சிறிலங்காவிலுள்ள ஏனைய அரசியற் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. எவ்வாறெனினும், போர் நடந்த வலயங்களில் மீள்கட்டுமானம், மீள் நிர்மாணம் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என சிறிலங்காவின் தலைமைத்துவம் நம்புகிறது. அத்துடன் அதிகாரப் பகிர்வு என்பது அரசியற் செயற்பாடென்றும் இது தொடர்பில் தான் விரும்பியவாறு முடிவெடுக்கலாம் எனவும் ராஜபக்ச கருதுகிறார். சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு சமானமாக தமக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனப் போராடிய தமிழ் மக்களின் மனங்களை பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் போன்றவற்றின் மூலம் வெற்றி கொள்ள முடியாது என்பதை எம்மால் அனுமானிக்க முடிகிறது.

0 கருத்துக்கள் :