தமிழீழம் கிடைத்திருந்தால் துன்பப்பட்டிருப்போம்

29.9.12

பயிலுநர்களாக உள்வாங்கி, தமிழ் மக்களது அபிலாசைகளை மழுங்கடிக்கும் வகையிலான கருத்துக்களை கருத்தமர்வுகளின்போது ஒருசில வளவாளர்கள் வெளியிடுவதாக பட்டதாரி பயிலுநர்கள் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பயிலுநர் பட்டதாரிகளுகென நடத்தப்படும் கருத்தமர்வுகளின் போதே மக்களின் மனங்களை நோகடிக்கும் விதமாக கருத்துத் தெரிவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அரச துறைகளில் நியமனம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயிலுநர்களாக நாட்டிலுள்ள சுமார் 42ஆயிரம் பட்டதாரிகள் இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்டு, மாவட்ட செயலகங்கள்,பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் தற்போது இணைக்கப்பட்டுள்ளனர். பயிலுநர்களின் திறன் விருத்திக்காகப் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தமர்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. துறைசார்ந்த அரச, அரச சார்பற்ற மற்றும் ஒய்வுநிலை அதிகாரிகள் வளவாளர்களாக அழைக்கப்பட்டே பயிலுநர்களுக்கான திறன்விருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான வளவாளர்களில் ஒருசிலர் கருத்தமர்வுகளின் போது வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் மற்றும் உதாரணங்கள் தமிழ் மக்களின் மனங்களை நோகடிப்பதாக யாழ்ப்பாணப் பயிலுநர் பட்டதாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர். கருத்தமர்வை நடத்துவதன் மூலம் எனக்கு ஒரு மணித்தியாலயத்துக்குப் பல ஆயிரம் ரூபா உழைக்க முடிகிறது. தமிழீழம் கிடைத்திருந்தால் இப்படி உழைக்க முடியாதிருந்திருக்கும். தமிழீழம் கிடைப்பதை நான் விரும்பியதில்லை. தமிழீழம் கிடைத்திருந்தால் நாங்கள் துன்பப்பட்டிருப்போம். என வளவாளர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் பயிலுநர் பட்டதாரிகள் மத்தியில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக் கூறப்படும் கருத்தமர்வில் வளவாளராகக் கலந்துகொண்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரே இவ்வாறு தமிழ் மக்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. பசுமைப்புரட்சிக்கான சமூக ஆர்வலராகக் காட்டிக்கொள்ளும் அந்த அதிகாரி யாரைத் திருப்திப்படுத்துவதுக்காகத் தமிழ் மக்களின் 30 வருடங்களுக்கு மேலான அபிலாசைகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்த முயல்கிறார் எனப் பட்டதாரிகளில் பலர் கேட்கின்றனர். தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுக்கும் நிலையிலுள்ள அந்த அதிகாரி தான் சார்ந்த நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு எப்படி சுயநலமற்ற புனிதமான பணியை முன்னெடுக்கமுடியும்? இவ்வாறு பட்டதாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் குறித்துப் பயிலுநர் நிலைப் பட்டதாரி ஒருவர் தெரிவிக்கையில், “வளவாளரின் கருத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது முன்னாலிருந்த கதிரையைத் துக்கி அவர் மீது எறியவேண்டும் போலிருந்தது. எங்களில் பலருக்கு இதே உணர்வுதான் ஏற்ப்பட்டது. பலர் தமக்குள் முணுமுணுத்தவாறு திட்டித் தீர்த்துக் கொண்டதுடன் செய்வதறியாது தர்மசங்கட நிலைக்கு உள்ளானார்கள். அந்த அதிகாரியை வெளியே போகுமாறு ஏசவேண்டும் போலிருந்தது. எனினும் எம்மை நாமே சாந்தப்படுத்திக் கொண்டோம்” என்றார்.

0 கருத்துக்கள் :