ஐ.நா. வாசல் நோக்கி வைகுந்தனின் கவனயீர்ப்பும் பொங்குதமிழ் பேரெழுச்சியும்!

17.9.12

பிரான்சின் ஸ்ரார்ஸ்புக் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு முன்னாலிருந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, செ. வைகுந்தன் கடந்த 3 நாட்களாக ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அவர், 22.09.2012 அன்று ஐ.நா.வின் முன்றலில் நடைபெற இருக்கும் மாபெரும் பொங்குதமிழுக்கு வலுச்சேர்க்க ஐரோப்பாவில் வாழ்கின்ற தமிழ் சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டியும் தனது மனிதநேயக் கடமையில் உறுதியோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.

தாயகத்தில் எங்கள் உறவுகள் எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்களை அழித்தவன், எங்கள் பாரம்பரியத்தை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை, எங்கள் தொன்மையான தூய தமிழ்மொழியை படிப்படியாக நுட்பமாகத் திட்டமிட்டு தொடர்ந்து அழித்து வருவதோடு, எங்கள் நிலத்தையும் நிரந்தரமாக வன்கவர்ந்து தன்னகப்படுத்தி வருகிறான்.

பத்து அல்லது இருபது ஆண்டிற்குள் தமிழரின் பூர்வீக தாயக நிலத்தில் தமிழர்கள் உரிமைகூற ஏதுமற்ற நிலை உருவாகக்கூடிய ஓர் இரகசிய செயற்றிட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இவ்வாறான ஒரு பாரிய திட்டமிட்ட மென்தீவிர இனவழிப்பு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு திட்டமிடப்பட்ட ஒரு மென்தீவிர இனவழிப்பிலிருந்து எமது உறவுகளை, எமது தாய்நிலத்தை, மொழியை, தமிழரின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?
உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழர்கள் ஓரணியாக எழுச்சிபெற்று சக்தி வாய்ந்த போராட்டங்களைச் செய்ய வேண்டும். நீதியின் கதவுகள் திறக்கப்படும்வரை நாம் ஓய்ந்துவிடாது தொடர்ந்து எங்கள் உரிமைக்காக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும்.

இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நிகர், எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் பண்பாடு - உலகிலேயே மிகவும் தொன்மையானது, வீரமானது, தனித்துவமானது!ஆகவே, எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தொடர்ந்து முனைப்போடு போராடுவோம்!
ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவரும் 22. 09. 2012 ஐ.நா. வாசல் நோக்கி அணிதிரள்வோமாக!

ஒன்றுபட்ட தமிழரின் எழுச்சியாக, எங்கள் பூர்வீக நிலம், இனம், மொழி, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்காக, எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மென்தீவிர இனப்படுகொலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓரணியாக நின்று மாபெரும் பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வை ஒரு சக்திவாய்ந்த போராட்டமாக மாற்றுவோமாக!

தங்கள் நடைமுறைச் சிரமங்களைப் பொறுத்தருள்ந்து, காலத்தின் கட்டாய வரலாற்றுக் கடமையை உணர்ந்து சுவிஸ் எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் பேரணியாக ஒன்றுகூடுமாறு மிகவும் பணிவன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

 
 
 

0 கருத்துக்கள் :