புலிகளுக்கு எதிரான போரில் பங்கெடுத்த மற்றொரு இராணுவத் தளபதி மரணம்.

2.9.12


விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான இறுதிப் போரில் தீவிரமாகப் பங்கெடுத்த சிறிலங்கா இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார். இறக்கும்போது அவருக்கு வயது 50 ஆகும்.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேஜர் ஜெனரல் சமந்த சூரிய பண்டார, கொமாண்டோ றெஜிமென்ட்டைச் சேர்ந்தவர்.

இவர் நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 53வது டிவிசனின் தளபதியாக இருந்தவர்.

முகமாலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.

2008 ஏப்ரலில் முகமாலையில் 53வது டிவிசனின் முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இவர் அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் இவர் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்கா, பாகிஸ்தான், சீனாவில் பயிற்சிகளைப் பெற்ற மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார, ஒரு பரசூட் மூலம் குதிப்பதில் வல்லவராவார்.

ஜெயசிக்குறு சமரின் போது இவர் பயணம் செய்த உலங்குவானூர்தி புலிகளின் தாக்குதலில் வீழ்ந்தபோது இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

ஆட்சிக்கவிழ்ப்பு சதிக் குற்றச்சாட்டை அடுத்து சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது, கட்டயமாக ஓய்வில் அனுப்பப்பட்ட சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 மேஜர் ஜெனரல்களில் சமந்த சூரியபண்டாரவும் ஒருவராவார்.

இவர் ஒய்வுபெறுவதற்கு 10 ஆண்டுகள் முன்னதாகவே, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதுடன், இவரது ஓய்வூதியமும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார குடும்பத்துடன் சிறிலங்காவை விட்டு வெளியேறி அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :