ஐ.நாவுக்கான பயணத்தை கைவிட்ட மகிந்த ராஜபக்ச. ஆங்கில ஊடகம்

21.9.12

ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நியுயோர்க்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சிறிலங்கா அதிபரின் வருகை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவருக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தனது அமெரிக்கப் பயணத்தைத் திடீரெனக் கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபருக்குப் பதிலாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் சிறிலங்கா அதிபரைக் கண்டித்து புலம்பெயர் தமிழர்கள் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே, இந்தப் பயணத்தை அவர் திடீரெனக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்கா அதிபரின் பயணம் திடீரெனக் கைவிடப்பட்டதற்கான காரணம் ஏதும் வெளியிடப்படவில்லை.

0 கருத்துக்கள் :