மிகச்சவாலான பயணத்தை தொடங்கியுள்ள மகிந்த ராஜபக்ச– ‘இந்து‘ நாளேடு

20.9.12

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிகவும் சவாலான இந்தியப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளதாக, ‘இந்து‘ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தின் போது, சிறிலங்காவின் “பழைய நண்பரான” இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கவுள்ளார். முன்னதாக, ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழக நிகழ்வில் மட்டுமே அவர் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் பின்னர் தான், மன்மோகன்சிங்குடனான சந்திப்பு முடிவானது. இவர்கள் இருவரும், 2010 ஜுன் மாதம் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் இருதரப்பு சந்திப்புகள் இடம்பெறவில்லை. சிறிலங்காவுக்கு வருமாறும் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு தொடக்கத்தில் விடுத்த அழைப்பை மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டிருந்தார். இருந்தபோதிலும், 2008ம் ஆண்டுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் சிறிலங்காவுக்குச் செல்லவில்லை. 2008ம் ஆண்டு பயணம் கூட அனைத்துலக மாநாடு ஒன்றுக்கானது தான். 2009 மே மாதம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், பல்வேறு விவகாரங்களில், இந்தியாவும், சிறிலங்காவும் ஒருமுக நிலைப்பாட்டில் இல்லை. மன்மோகன்சிங்கின் பயணத்துக்கு முன்பாக, நல்லிணக்க விவகாரங்களில், குறிப்பாக தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்த விவகாரங்களில் கணிசமான முன்னேற்றம் தேவை என்கிறது இந்தியா. இருநாடுகளினதும் தலைவர்களுக்கு இடையில் தொடர்பாடல் இடைவெளி நிலவுகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மார்ச் கூட்டத்தொடரின் போதான வாக்கெடுப்பின் போதும் அதற்குப் பின்னருமான சூழல் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இருநாடுகளினதும் மூத்த அதிகாரிகளினது கலந்துரையாடல்கள்- வாக்கெடுப்பின் போது, இந்தியா நடுநிலை வகிக்கும் அல்லது எதிர்க்கும் என்று ராஜபக்ச நம்புவதற்கு வழிவகுத்தது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததற்கான காரணங்களை மன்மோகன்சிங் விளக்கியுள்ள போதும், மகிந்த ராஜபக்ச அது ஒரு தவறு என்ற நிலைப்பாட்டிலேயே இன்னமும் இருக்கிறார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின், பூகோள கால மீளாய்வின் போது இந்தியா இதற்குப் பரிகாரம் தேடும் என்று நம்புகிறார் அவர். ஆனால், உண்மையில் புதுடெல்லியில் இருந்த அதற்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கான அடிப்படைகள் இல்லை. மூத்த இந்திய அதிகாரி ஒருவருடனான உரையாடலின் போது, 2009இல் சிறிலங்கா கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறியதே, இந்தியா எதிர்த்து வாக்களிக்கக் காரணம் என்று தெளிவாக குறிப்பிட்டார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :