தமிழீழ ஆதரவாளர் விஜயராஜ் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்களின் வீரவணக்கம்

19.9.12

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ள தமிழீழ ஆதரவாளர் விஜயராஜ் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்கள் தமது வீர வணக்கத்தை தெரிவித்துள்ளதுடன் நெஞ்சுருகும் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கியுள்ளனர். அவரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் குடாநாட்டு மக்கள் தமது ஆறுதலையும் தெரிவித்துள்ளனர். அதேவேளை. தமிழகத்து உறவுகள் இனிமேல் இவ்வாறான உயிரை மாய்க்கும் தியாகச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்றும் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்தும் ஜனநாயக வழியில் போராடுமாறும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் தமிழக உறவுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக குடாநாட்டு மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொலைகாரப் பாவியாகிய மகிந்தவை இந்தியாவிற்கு வர அனுமதிக்கக் கூடாது என்று கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. தமிழகக் கட்சிகளாலும் தமிழின உணர்வாளர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் ஈழத் தமிழர்களாகிய நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் தியாகச் செம்மல் விஜயராஜ் எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளார். சேலம் போஸ் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் விஜயராஜ் அவர்கள் தீக்குளித்துவிட்டார் என்ற செய்தி கேட்டு நாம் எல்லோரும் மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். ஆவர் விரைவில் குணமாக வேண்டுமென்று பிரார்த்தித்தோம். ஆனால். தீக்குளித்த விஜயராஜ் இன்று உயிரிழந்துள்ளார் என்ற செய்தியானது எம்மையெல்லாம் கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது. தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கி தீயில் சங்கமித்து ஈழத் தமிழருக்காய் நியாயம் கேட்ட விஜயராஜ் இன்று எம்முடன் இல்லை என்பதை நினைக்க எம்மால் தாங்க முடியவில்லை. ஏற்கனவே தியாகத் தீயில் ஆகுதியாகிய முத்துக்குமார். செங்கொடி போன்றவர்களுடன் இன்று விஜயராஜீம் இணைந்துள்ளார். ஈழத்தில் விடுதலைக்காக மக்களும் போராளிகளும் செய்த தியாகங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக உறவுகளின் தியாகம் அளப்பரியது. இந்தப் போராட்டங்களில் தம்மை ஆகுதியாக்கிய தமிழக உறவு விஜயராஜ் அவர்களின் வீரத்தை நாம் மெச்சுகிறோம். ஆவரின் தமிழின உணர்வைப் போற்றுகிறோம். அவருக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அன்புக்குரிய தமிழக உறவுகளே நீங்கள் எங்களுக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் மேலும் மேலும் ஒங்கி ஒலிக்கட்டும். ஆனால் யாரும் தீக்குளிக்காதீர்கள். உங்கள் உடல்களை யாரும் மாய்த்துக்கொள்ளாதீர்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உங்கள் உடல் இருந்தால்தான் நீங்கள் எமக்காக குரல் கொடுக்க முடியும். எனவே நீங்கள் இனிமேல் தீக்குளிக்காதீர்கள் என்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)